டிச. 24-ல் இந்தியா-பாகிஸ்தான் தொடர் ஆரம்பமாகின்றது ?

இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன.

அதன்படி இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டித் தொடர் வருகிற 15–ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இந்தியா– பாகிஸ்தான் போட்டிக்கு ஒப்புதல் கொடுத்தார். ஆனால் இந்திய அரசாங்கம் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. 

India-Vs-Pakistan-620x330

இந்நிலையில் பாகிஸ்தான் தொடர் குறித்து மத்திய அரசு இன்று முடிவு தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் அரசுடனான சுஷ்மாவின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று முடிவு இறுதியாகும் என்று கூறப்படுகிறது.

அப்படி மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் டிசம்பர் 24-ம் தேதி முதல் இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் முடிந்து குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு மேல் இந்திய வீரர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் டிசம்பர் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் நடைபெறும் பாகிஸ்தான் உடனான தொடர் முடிவடைந்த பிறகு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ள கொழும்பில் இருந்து இந்திய அணி புறப்படும் என்றும் கூறப்படுகிறது.