காப்புரிமை பிரச்சனை: ஆப்பிளுக்கு 548 மில்லியன் டாலர் கொடுக்க சாம்சங் சம்மதம்!

 
காப்புரிமைகள் தொடர்பான பிரச்சனையில் ஆப்பிளுக்கு 548 மில்லியன் டாலர் கொடுக்க சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் குழுவினர் பல ஆண்டுகள் கடிமையாக உழைத்து உருவாக்கிய ஐ போன் மாடல்களைப்போன்று தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனமும் தயாரிப்புகளை வெளியிடுவதாக ஆப்பிள் நிறுவனம் புகார் அளித்தது.

8d08eb6d-64f7-40df-9d7e-0f117d1fe2b5_S_secvpf

இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சட்டப்போர் நடந்துவருகிறது. வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், சாம்சங் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினையை பேசித் தீர்க்க இரு தரப்பும் கடந்த ஆண்டு முடிவு செய்தனர். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இரு தரப்பும் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியாக, 548 மில்லியன் டாலர் தொகையை ஆப்பிள் நிறுவனத்திற்கு கொடுக்க சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து அதில் வெற்றி பெற்றால் பணத்தை திருப்பி பெறும் உரிமை தனக்கு உள்ளதாகவும் சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனையை ஆப்பிள் ஏற்றுக்கொள்ளவில்லை.

10 நாட்களுக்குள் இழப்பீட்டு தொகையை சாம்சங் தருவதாக கூறினாலும், அவர்களின் நிபந்தனையை ஆப்பிள் ஏற்க மறுத்துவருவதால் வழக்கில் சுமுகமான முடிவு எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.