தாஜூடீன் கொலையும் தொடரும் குழப்பங்களும் ஒரே பார்வையில்
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் மூன்று ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 10ம் திகதி தாஜூடீனின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
அதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்படைய மூன்று ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
தாஜூடீனை கடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸவின் தன்னார்வ நிறுவனமான சிரிலியே சவிய அமைப்பின் வாகனம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பிரித்தானியாவிற்கு குறித்த நபர் செல்வதற்கு உதவி வழங்கிய ராஜதந்திரி ஒருவர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாஜூடீன் மரணம் தொடர்பில் காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் தொடர்பில் காவல்துறையினருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
தாஜூடீனின் உறவினர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாஜூடீனின் மரணம் விபத்தினால் சம்பவித்தது என போலியான தகவல்களை வழங்கி விசாரணைகளை காவல்துறையினர் திசை திருப்பியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற காவல்துறை மா அதிபர் ஒருவருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட உள்ளது
2012ம் ஆண்டு சம்பவம் இடம்பெற்ற போது நாரஹேன்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
முறைப்பாடு செய்வது குறித்து தேசிய காவல்துறை ஆணைக்குழுவுடனும் தாஜூடீனின் குடும்ப சட்டத்தரணிகள் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, முன்னதாக வெளியிடப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்கிய சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பிலான முக்கிய CCTV. கமரா பதிவுகளில் அதி முக்கிய பிரபு ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு பட்டிருப்பமை அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு வானொலி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த CCTV கமரா பதிவுகள் விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் மிக முக்கிய பிரபு ஒருவரின் உறவினர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பது உர்ஜிதமாகியுள்ளது என்ற வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி மரணம் பற்றிய தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கியதன் பின்னர், சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என குற்ப் புலனாய்வு திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தாஜூடீன் மரணம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது
06-12-2015 – 09:43
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 10ம் திகதி இந்த தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கை மற்றும் ஏனைய சாட்சியங்களின் அடிப்படையில் மரணம் எதனால் சம்பவித்தது என்பது பற்றி நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
தாஜூடீன் உண்மையில் வாகன விபத்தினால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யபபட்டாரா என்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை, அண்மையில் நீதிமன்றில் தாஜூடீன் மரணம் குறித்து வழங்கப்பட்ட அறிக்கையில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை படுகொலை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய பிரபு ஒருவரின் புதல்வருக்கு இந்தக் கொலையுடன் தொடர்பு இருப்பதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு தாஜூடீன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-gtn –