ஜனாதிபதி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

1382286569-srilankain-o

பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்து அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்குவது குறித்து நிர்ணயிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் காலத்திற்கு காலம் இந்த பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினருமே இனி வரும் காலங்களில் பாதுகாப்பு வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரை பிரபுக்களுக்கான பாதுகாப்பு வழங்குதல் போன்ற சிவில் கடமைகளில் ஈடுபடுத்துவது சட்டத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினருமே பாதுகாப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு 500 இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதனால் இவ்வாறு இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.