தமிழர் பிரச்சினை சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர் !

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு தமிழர் அரசியல் சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டாக இருக்குமென்று தான் நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
 
Sambanthan_CI
இந்துமாமன்றத்தின் 60ஆவது ஆண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற சிவத்தொண்டர் மாநாடும் ஆறுமுகநாவலரின் எழுச்சியும் என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாதிருந்த பல விடயங்கள் அடுத்த ஆண்டில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான நிலமைகள் கனிந்து வந்துள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.
 
இதேவேளை தமிழர்களின் இனப்பிரச்சினை இந்த நாட்டில் மாத்திரம் தற்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சர்வதேச மயப்பட்டுள்ள தமிழர் பிரச்சினை சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இன்று சர்வதேச சமூகம், சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை என்பன இலங்கையில் நிரந்தர சமாதானம், நிரந்தர புரைிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஒருமித்து எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 
 
சைவத்திற்கும் தமிழுக்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்பு இருப்பதாக தெரிவித்த அவர்  சைவம் பாதுகாக்கப்படவேண்டுமாக இருந்தால் தமிழ் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.