அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ விசனம் வெளியிட்டுள்ளார்.
மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தமக்கு பெரும் தொந்தரவாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே சம்பவம் தொடர்பில் பல தரப்பினர் விசாரணை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் பல்வேறு தரப்பினரின் விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு ஆகியன ஒரே சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விசாரணைகளை அரசியல் ரீதியான துன்புறுத்தலாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக மட்டும் பத்து தடவைகள் தாம், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள விசாரணைக்குழு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஓர் சம்பவம் தொடர்பில் ஓரு நிறுவனத்தினால் விசாரணை நடத்தப்படுவதே ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதி எனவும், எனினும் தமக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஒரே விடயம் குறித்து பல தடவை விசாரணை நடத்தி அரசியல் ரீதியாக பழிவாங்கி வருவதாக கோதபாய ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.