சிரியாவில் தீவிரவாதிகளின் எண்ணெய் வயல்கள் மீது இங்கிலாந்து விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
தற்போது இவர்களுடன் இங்கிலாந்தும் இணைந்துள்ளது. இதற்காக அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் பிரதமர் டேவிட் கேமரூன் ஒப்புதல் பெற்றார். அதை தொடர்ந்து இங்கிலாந்து போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
அந்நாட்டு ராணுவத்தின் டொர்னாடோ ஜி.ஆர்.4 எஸ் ரக போர் விமானங்கள் சிரியாவில் ரமாடியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசி தாக்குகின்றன. இந்த தகவலை இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் 2 டொர்னாடோ போர் விமானங்கள், மற்றும் 2 டைபூன்ஸ் ரக போர் விமானங்கள் தீவிரவாதிகளின் எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்கி அழிக்கின்றன. இதற்கு முன்பு 4 டொர்னாடோ போர் விமானங்கள் கிழக்கு சிரியாவில் ஒமர் எண்ணெய் வயல்கள் மீது குண்டு வீசி தாக்கின.