தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி மற்றும் ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 334 ரன் குவித்தது. ரகானே 127 ரன்னும், அஸ்வின் 56 ரன்னும் எடுத்தனர். அபோட் 5 விக்கெட்டும், பியட் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 121 ரன்னில் சுருண்டது. டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ்யாதவ், அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதனை தொடர்ந்து இன்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்பிரிக்கா அணி குறைவான ரன்கள் எடுத்த போதும் அந்த அணிக்கு கேப்டன் வீராட் கோலி ‘பாலோஆன்’ கொடுக்கவில்லை. 213 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2–வது இன்னிங்சை விளையாடியது. முரளி விஜய் 3 ரன்களிலும், ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருப்பினும் ஷிகார் தவான் 21 ரன்களிலும், புஜாரா 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் கேப்டன் விராட் கோலியும், ரகானேயும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட்கோலி மற்றும் ரகானே இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி 83 ரன்களுடனும், ரகானே 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணியில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுக்களையும் இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கோலி, ரகானே ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி 403 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.