சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. விமானங்கள் ஞாயிறு வரையில் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. இதனால், போக்குவரத்து சீரடையத் தொடங்கி உள்ளது.
மழை குறைந்ததையடுத்து சென்னை விமான நிலையத்தில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் ஓடுபாதைகள் பகல் நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கு உகந்ததாக இருப்பதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்தது. இதனால், இன்று முதல் பகல் நேரத்தில் மட்டும் விமானங்கள் இயக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் சேவை இன்று துவங்காது என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
“இன்று தொழில்நுட்ப விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. விமான நிலையத்தின் தரைத்தளத்தில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளதாலும், விமான முனைய கட்டிடத்தில் முழுமையான மின்சப்ளை கிடைக்காததாலும் வணிக ரீதியிலான விமானங்களை இயக்க முடியவில்லை.
விமான நிலையத்தில் தண்ணீர் வடியத்தொடங்கினாலும், தற்போது உள்ள சூழலில் விமான நிலையத்தில் இருந்து சேவையை துவங்க முடியாது. மின் விநியோகம் சீரான பிறகுதான் விமான சேவை தொடங்கும். இதனால், விமான சேவை தொடங்க இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.
அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து 4 விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.