ஆப்கானிஸ்தானில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டிருந்த நேட்டோ படைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாபஸ் பெறப்பட்டன. 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் மட்டும் தங்கியுள்ளனர். எனவே அங்கு தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் மேலோங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஹெல்மான்ட் மாகாணம் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது.
நவ்சாத் மாவட்டத்தில் தலிபான்களின் சிறை உள்ளது. அங்கு தலிபான்கள் பிணைக் கைதிகளாக பிடித்தவர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தனர். அதை அறிந்த ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க அதிரடிப்படை உதவியுடன் மீட்டனர்.
நேற்று முன்தினம் இரவு ஹெலிகாப்டரில் பறந்து சென்ற அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 கைதிகளை பத்திரமாக மீட்டனர். அவர்களில் போலீஸ், ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அடங்குவர். இவர்கள் தலிபான் தீவிரவாதிகளிடம் எப்படி சிக்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.