ஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் பத்து லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் துருக்கி ராணுவத்தின் ஒரு பட்டாலியன் காலாட்படைகள் ஈராக்கின் வடக்கு நினேவே பகுதிக்குள் நேற்று நுழைந்தன. ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்காக தங்கள் நாட்டுப் அடைகளை அங்கு அனுப்பியிருப்பதாக துருக்கி அரசு அறிவித்திருந்தது.
எனினும், அந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள இராக் அரசு மோசூல் நகரின் அருகே முகாமிட்டிருக்கும் படைகளை திரும்பப்பெற வேண்டும் என துருக்கி அரசை வலியுறுத்தியுள்ளது. ஈராக் அரசின் அனுமதியின்றி எங்கள் ராணுவ வீரர்களுக்கு எவ்வித போர் பயிற்சியும் அளிக்க துருக்கி ராணுவம் முயற்சிக்க கூடாது.
இது, ஈராக்கின் இறையாண்மையை மீறும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஊடுருவலாகவும் கருதப்படும். எனவே, நினேவே பகுதியில் முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு ராணுவத்தை துருக்கி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஈராக் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.