22 ஓட்டங்களால் சென்னையை வென்றது ஐதராபாத் !

212337.3

ஐ.பி.எல்., தொடரில் நேற்று பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஐதராபாத் வெற்றிக்கு வார்னரின் ‘மின்னல்’ அரைசதம் கைகொடுத்தது.எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சென்னை அணியில் வழக்கம் போல மாற்றம் இல்லை. ஐதராபாத் அணியின் போபராவுக்குப் பதில் இயான் மார்கன் சேர்க்கப்பட்டார்.
வார்னர் விளாசல்: ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான், கேப்டன் வார்னர் ஜோடி அசத்தல் துவக்கம் கொடுத்தது. மோகித் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய வார்னர், தொடர்ந்து நெஹ்ரா, ரோனித் மோரே ஓவர்களில் பவுண்டரி மழை பொழிந்தார். 20 வது பந்தில் இவர் அரைசதம் கடக்க, ஐதராபாத் அணி 8 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. 28 பந்தில் 61 ரன் எடுத்த வார்னர், ஒரு வழியாக அவுட்டானார். மின் விளக்கு பிரச்னை: அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 9 பந்தில் 19 ரன் எடுத்தார். தவான் (37) ரன் அவுட்டானார். 14.1 ஓவரில் 133/3 ரன்கள் எடுத்த போது, மின் விளக்குகளில் ஏற்பட்ட கோளாறால், 15 நிமிடம் போட்டி பாதிக்கப்பட்டது.
மீண்டும் ஆட்டம் துவங்கியதும் நமன் ஓஜா (20), ஆஷிஸ் (6), விகாரி (8), கரண் சர்மா (4) வரிசையாக கிளம்பினர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. மார்கன் (32) அவுட்டாகாமல் இருந்தார்.
கடின இலக்கு:
கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஸ்மித் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பவுல்ட் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த மெக்கலம் (12) அதேவேகத்தில் அவுட்டானார். ஸ்மித் (21), ரெய்னா (23) என, சீரான இடைவெளியில் திரும்ப, சென்னை அணி 10 ஓவரில் 87/3 ரன்கள் எடுத்தது.
பின் இணைந்த டுபிளசி, தோனி சற்று போராட லேசான வாய்ப்பு தெரிந்தது. இந்த நம்பிக்கையை ஆஷிஸ் ரெட்டி, தகர்த்தார். இவரது முதல் ஓவரின் 4வது பந்தில் டுபிளசி (33) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாகினார். அடுத்த பந்தில் தோனி (20) போல்டானார்.
பின் வந்த நேகி (15) கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். கடைசி நேரத்தில் பிராவோ, ஜடேஜா மந்தமாக ஆடி வெறுப்பேற்றினார்.
சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் மட்டும் எடுத்து, இத்தொடரில் 3வது தோல்வியை சந்தித்தது. ஜடேஜா (14), பிராவோ (25) அவுட்டாகாமல் இருந்தனர்.