இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட, இலங்கை தமிழர், மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோரின் உடல்கள், விமானம் மூலம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கொண்டு வரப்பட்டன.
இந்தோனேஷியாவின் பாலி தீவில், போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய, இவர்களின் மரண தண்டனை, சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தோனேஷியாவில் இருந்து, தங்கள் நாட்டு தூதரை திரும்ப பெறுவதாக, ஆஸ்திரேலியா அறிவித்தது.ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடூரமான முறையில், தேவையின்றி இரு உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளன.
நம் கோபமும், இரங்கலும் போன உயிர்களை மீட்டு வரப் போவதில்லை. இந்தோனேஷியாவுடன் மீண்டும் உறவு புதுப்பிக்கப்படும் என, நான் நம்புகிறேன். நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் இருப்பது தான், நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி.இவ்வாறு, அவர் கூறினார்.