(வீடியோ) மறைந்த மௌலானாவின் வெற்றிடம் நிரப்ப முடியாத ஒன்றாகும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Shafeek Hussain

மசூர் மௌலான என்ற ஆளுமை, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளதெனவும், மறைந்த மௌலானாவின் வெற்றிடம் நிரப்ப முடியாததொன்றெனவும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (04) அதிகாலையில் காலமான மசூர் மௌலானாவின் மறைவினால் குறிப்பாக அவரது சொந்த ஊரான மருதமுனை மக்களும், பொதுவாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும் பெரிதும் கவலையடைவதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

MS_Fotor

அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனை மாநாகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மேயர் பதவியையும், பிரதிமேயர் பதவியையும் அலங்கரித்த மறைந்த மசூர் மௌலானா உயிர் வாழ்ந்த ஒரேயோரு முஸ்லிம் செனட்டரென்பது குறிப்பிடத்தக்கது.

இளமைக்காலம் தொட்டு அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்த நாவன்மையாலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அவருக்கிருந்த ஆற்றலினாலும், கூர்மையான அரசியல் அறிவினாலும், மொழிபெயர்ப்பு திறமையினாலும் நாவலர் மசூர் மௌலானா அரசியல் மேடைகளை அதிர வைத்தார்.

அப்போதைய தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் மசூர் மௌலானாவை உரையாற்ற அழைக்கும் போது மக்களின் கரகோஷசம் வானைப் பிளந்தது.

அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களுடன் அவருக்கிருந்த இறுக்கத்தினாலும், நெருக்கத்தினாலும் தமது மண்ணுக்கும், நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கும் அவராற்றிய சேவைகள் அளப்பரியன.

மருதமுனை மக்களின் மனங்களை விட்டு என்றுமே அகல முடியாத மாபெரும் மக்கள் சேவகனாக மதிக்கப்படும் மசூர் மௌலானா, தமிழர் அரசியலின் தானைத் தளபதி மறைந்த எஸ்.ஜே.வி. செல்வநாயத்தின் வழிகாட்டவில் தமிழரசுக் கட்சியின் புகழ்பூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச போன்றோரின் அன்புக்குரியவiராகவும் அவர் விளங்கினார்.

தமிழ்பேசும் மக்களின் அரசியல் போராட்டத்தில் ஆரம்பத்தில் தம்மை இணைத்துக் கொண்ட மசூர் மௌலானா, தெற்கின் அரசியல் குண்டர்களின் அடாவடித்தனங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் இலக்காகி தாக்குதலுக்குள்ளானவர் என்பதும் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.

பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தோற்றுவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபரிமிதமானஅரசியல் வளர்ச்சியினால் பெரிதும் கவரப்பட்ட மசூர் மௌலானா தம்மை கட்சியின் அரசியல் சித்தாந்தத்தோடு முழுமையாக இணைத்துக் கொண்டு எனது தலைமையின் கீழும் மிகவும் விசுவாசத்துடன் நோயுற்றிருந்த நிலைமையிலும் கூட இயன்ற வரைகட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அன்னாருக்கு எல்லாம் வல்லஅல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை நிரந்தரமான தங்குமிடமாக்குவானாக. 
அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மருதமுனை மக்களுக்கும் தனிப்பட்ட முறையிலும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

– அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் –
தேசிய தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சர்