தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போட் சிட்டி வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான சுற்றுச்சூழல் அறிக்கை கிடைக்கப் பெறும் வரை ஆறு மாத காலங்கள் குறித்த வேலைத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது எவன்காட் நிறுவனம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜித்த எவன்காட்டை அரசாங்கம் கையகப்படுத்திய பின்னர், முதல் ஆறு நாட்களில் மட்டும் ஐந்து இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் இலாபம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாளாந்தம் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா வறுமானம் கிடைப்பதாகவும் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு ஒருநாளைக்கு 25 இலட்சம் மட்டுமே இலாபமாக கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தன்னுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, இன்று வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக கூறவில்லை என குறிப்பிட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இவர்கள் இன்று காலை வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும், வாகன அனுமதிக்காக ஒரு மில்லியன் வழங்குவது அவர்கள் தரப்பில் இருந்து பார்த்தால் இலாபமானது எனவும் அவ்வாறிருக்க வேலை நிறுத்தத்தை மேற்கொண்டது வருந்தத்தக்கது எனவும் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் வினவப்பட்டதற்கு, 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 95 பேரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் இம்முறை விடுதலை செய்ய எதிர்பார்த்துள்ளது சிறு சிறு குற்றங்களுக்காக அல்லது குற்றச்சாட்டுக்கள் இன்றி வருடக் கணக்கில் சிறையில் இருப்பவர்களை மட்டுமே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.