நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஆடைகள் கூட காலத்திற்கு காலம் வித்தியாசமான வடிவமைப்புக்களில் சந்தையில் கிடைக்கும்.மக்களின் எதிர் பார்ப்பினை எந்த நிறுவனம் நிவர்த்தி செய்கின்றதோ? அந்த நிறுவனத்தின் கல்லா களைகட்டும்.இது ஆடைக்கு மாத்திரம் பொருந்தும் ஒன்றல்ல.இது அரசியலுக்கும் நன்றாகவே பொருந்தும்.மு.காவினை அஷ்ரப் ஸ்தாபித்த காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கென்று ஒரு கட்சியின் அவசியம் உணரப்பட்டமையினாலும் அன்றைய அரசியல் சந்தையில் அஷ்ரபின் ஆளுமையின் முன்பு யாரும் நிற்கத் திராணி பெறாமையினாலும் மு.காவினை ஸ்தாபித்த காலப்பகுதியில் அஷ்ரபிற்கு அதீத விளம்பரங்கள் தேவைப்படவில்லை.எனினும்,அஷ்ரப் தனது கட்சியினை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் மு.காவின் ஆதரவாளர்களினை உச்சாகப்படுத்தவும் பல்வேறு யுக்திகளினைக் கையாண்டிருந்தார்.இந்த யுக்திகளில் நடை பவனியினை மிக முக்கியமானதாக குறிப்பிடலாம்.அதாவது மக்கள் குழுமியுள்ள இடத்தில் இறங்கி அங்குள்ள மக்களினை தன்னோடு இணைத்துக் கொண்டு மக்களோடு மக்களாக நடப்பார்.இவரோடு செல்லும் மக்களினைக் கண்டு மு.காவின் எதிரிகளுக்கு குலை நடுங்கும்.புதினம் பார்போரும் மு.காவினுள் புகுந்து கொள்வார்கள்.அஷ்ரப் இவ் நடைபவனியினை முதன் முதலில் 1991 காலப்பகுதியில் சாய்ந்தமருதில் வைத்தே ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்றே பேராளர் மாநாடுகள் அதிகம் நடாத்தப்படும்.இப் பேராளர் மாநாட்டிற்கு நாட்டின் முக்கிய புள்ளிகள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.இப் பேராளர் மாநாட்டில் அன்று பிரபலமாக இருந்த பிரேமதாசா,சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க,சௌமியமூர்த்தி தொண்டமான்,உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போன்றோரினை கலந்து கொண்டோரில் சிலராக கோடிட்டுக்காட்டலாம்.இவர்கள் மு.காவின் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது,இவர்களின் ஆதரவாளர்கள் மு.காவுடன் இணைந்து கொள்ள அது வழி சமைத்துக் கொடுக்கும்.அஷ்ரப் மு.காவினை வளர்க்க பல்வேறு குழுக்களினை,சமூகங்களினை மு.காவுடன் இணைத்துக் கொண்டார்.இக் குழுக்கள்,சமூகங்களினை மு.காவுடன் இணைத்துக் கொள்ள மாதர் காங்கிரஸ்,மாட்டு வண்டி காங்கிரஸ்,உலமா காங்கிரஸ்,மீனவர் காங்கிரஸ் போன்றவற்றினை நிறுவினார்.இச் செயற்பாடு மு.காவின் வளர்ச்சியில் பாரிய ஒரு இடத்தினை பிடித்திருந்ததாக அன்றைய அரசியல் ஆய்வாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.இதன் மூலம் பலதரப்பட்ட சமூகங்கள் மு.காவின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன.அஷ்ரபின் அரசியல் கட்சி வளர்க்கும் சாணக்கியம் உண்மையில் பேனையினால் எழுதி முடிக்கும் ஒன்றல்ல.எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவராக மிளிர விரும்புவோர் இவரின் வரலாற்றினை அசை போட்டுப் பார்ப்பதன் மூலம் நொடிக்கி நொடி பல்லாயிரம் படிப்பினையினை பெறலாம்.
இவ்வாறு மு.கா அசுர வேகத்தில் தனது எதிரிகளினை வீழ்த்தி சரித்துச் சென்ற போது மு.காவின் முதற் தவிசாளரான சேகு இஸ்ஸதீன் மு.காவினை விட்டும் பிரிந்த சென்றார்.பிரிந்து சென்றது மாத்திரமல்ல அஷ்ரப் வீசும் பந்திற்கு எதிராக களத்துடுப்பாட்டம் செய்யவும் துணிந்தார்.இதன் போது மு.கா ஒரு பாரிய சவாலினை எதிர் கொண்டது.இது மு.கா என்ற கட்சிக்கான சவால் என்பதை விட அஷ்ரபின் அரசியலினை குழி தோண்டிப் புதைக்க சேகு இஸ்ஸதீனால் வெட்டப்பட்ட பாரிய குழி எனலாம்.ஊடகவியலாளர்கள் பலர் சேகு இஸ்ஸதீனிற்கு சார்பாக தங்களது கட்டுரைகளினை வரைந்து மக்களினை சேகு இஸ்ஸதீனின் பக்கம் ஈர்க்க வழி சமைத்துக் கொடுத்தனர்.தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட புகார்தீன் ஹாஜியார்,அந் நேரத்தல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அஷ்ரபினை விட்டும் தூரமாகின்றனர்.அஷ்ரப்,சேகு இஸ்ஸதீனுக்கிடையில் தோற்றம் பெற்ற முரண்பாட்டில் சேகு இஸ்ஸதீனின் பக்கம் நியாயம் இருந்த படியினால் மக்களும் அவர் பக்கம் தங்கள் அனுதாபப் பார்வையினைத் திருப்பினர்.அஷ்ரபின் வளர்ச்சியில் கண்குற்றி இருந்த பேரினக் கட்சிகள் அஷ்ரபினை வீழ்த்த சேகுவினை கோடாரிக் காம்பாக பயன்படுத்த நினைத்து தங்களது மறைமுக ஆதரவினையும் வழங்கின.
இந்த இக்கட்டானதொரு சந்தர்ப்பத்தில் தான் 1994ம் ஆண்டய உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அஷ்ரப் எதிர் கொண்டார்.இத்தனை சவால்களுக்கு மத்தியில் அஷ்ரப் இத் தேர்தலினை எதிர் கொண்ட விதம் ஒரு சாதாரண அரசியல் வாதியால் முகம் கொடுத்திருக்க முடியாது.முரண்பாட்டின் பின்பு சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இந்தக் கூட்டத்தினைப் பார்த்து அஷ்ரபின் கண் எதிரே தான் பாராளுமன்றம் சென்று காட்டுவேன் என்ற சேகுவின் சவால் நிறைவேறப்போவதாக மக்களும் சிலாகிக்க ஆரம்பித்தனர்.இதனைக் கண்டு அஷ்ரப் சிறிதும் கலங்கவில்லை.கச்சை அவிழ்ந்து அம்மணம் வெளிப்பட்டு விடுமோ? என்றும் அஞ்சவில்லை.மாறாக மிகவும் வீரியமாய்ச் செயற்பட்டார்.மூதூரில் இருந்து ஆரம்பித்து பொத்துவில் வரை ஒரு மிகப் பிரமாண்டமான நடை பவனியினை ஏற்பாடு செய்திருந்தார்.அது மாத்திரமல்ல இத்தனை சவால்கள் மிகுந்த சூழ் நிலையில் திகாமடுல்லவில் முஸ்லிம்களினை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்தையேனும் மு.கா கைப்பற்றத்தவறினால் தான் தனது பாராளுமன்றப் உறுப்புருமையினைத் துறப்பேன் என்ற சவாலினையும் விடுத்தார்.இவரின் இச் சவால் அத் தேர்தலின் பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது.இவ்வாறான அஷ்ரபின் வித்தியாசமான சிந்தனை கொண்ட அரசியலின் முன் சேகு இஸ்ஸதீனினால் அஷ்ரபின் உரோமத்தினைக் கூட அசைக்க முடியவில்லை.அன்று மூக்குடைந்த சேகு இஸ்ஸதீனை எழுப்ப அவருக்கு பலரும் சேலைன் பாய்ச்சிய போதும் அவரால் இன்று கூட அரசியலில் எழுந்து நிற்க முடியவில்லை.
அந்த சவாலில் அஷ்ரப் தோல்வியைத் தழுவினார்.பலரும் அஷ்ரப் தோற்றுவிட்டதாக நினைத்தனர்.அந்தத் தோல்வி தான் அஷ்ரபின் வெற்றிக்கு பாரிய பலமிக்க அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தது.அந் நேரத்தில் பலரும் பாராளுமன்ற உறுப்புருமையினை இராஜினாமா செய்ய வேண்டாம் என அஷ்ரபினை வேண்டிக் கொண்டனர்.எனினும்,எதிர்கால சமூகம் என்னை வாக்குறுதி மீறியவனாக வரலாற்றில் பார்க்கக் கூடாது என்ற பேச்சோடு தனது உறுப்புருமையினை இராஜினாமா செய்தார்.அஷ்ரபின் இச் செயற்பாடு ஒரு உண்மைத் தலைவனுக்குரிய பண்பினை மக்களிடையே புடம் போட்டுக் காட்டியது.இதன் சூடு ஆறுவதற்கு முன்பு அதே ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலும் வந்தது.அஷ்ரபின் இச் செயற்பாடு மக்களிடையே ஏற்படுத்திய உளமாற்றத்தினை மக்கள் தங்கள் வாக்குகளினூடாக வெளிப்படுத்தினர்.அஷ்ரபின் தோல்வியும் வெற்றிக்கான வியூகமாக அமைந்திருந்தமையே இங்கே நாம் அறிந்து கொள்ளவேண்டிய விடயமாகும்.
அதாவது அஷ்ரப் மு.காவினை வளர்க்க,சேகு இஸ்ஸதீனை எதிர்கொள்ள தனது செயற்பாடுகளில் ஒரு வித்தியாசமான மக்களைக் கவரக் கூடிய யுக்திகளைக் கையாண்டுள்ளார் என்பதை மேலுள்ள வரலாறுகள் எமக்கு தெளிவாக சுட்டி நிற்கின்றன.ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தனது அல் ஜிஹாத் அல் கைதா எனும் நூலில் அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் தனது நுஆ கட்சியினூக 2012 ம் ஆண்டு இலங்கையின் ஆட்சியினைப் பிடித்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.இதுவே அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட நுஆ கட்சியின் நோக்கமும் கூட.இப்படி அசைக்க முடியாமல் இருந்த இக் கட்சியின் இன்றைய நிலைதான் என்ன? என்பதுவே இன்றுள்ள வினா.பதினொரு பாராளுமன்ற உறுப்பினராக அஷ்ரப் விட்டுச் சென்ற கட்சி தேய்ந்து இன்று ஆறில் வந்து நிற்கின்றது.மு.காவின் இவ் வீழ்ச்சிக்கு பல காரணாங்கள் இருப்பினும் மு.கா வித்தியாசமாக காலத்திற்கு ஏற்ப தன்னை மக்களிடையே வெளிப்படுத்தும் கவர்ச்சி வழி முறைகளினை கையாளாமையும் இதில் மிக முக்கிய காரணமாகும்.இன்னும் தேர்தல் வந்தால் மட்டும் மேடைகளில் முழங்கும் பிரச்சார வழிமுறையினைத் தான் மு.கா கையாண்டு வருகிறது.இயற்கையில் பிள்ளை முகவாக்கோடு அழகாக இருந்தாலும் குளித்து சுத்தமாக மனம் குணத்தோடு அழகான ஆடைகள் அணிந்து இருந்தால் தான் பார்ப்போரை அந்தப் பிள்ளை கவருமல்லவா?
தற்போதைய அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா வித்தியாசமாக சிந்திக்கத் தேவை இல்லை.குறைந்தது அஷ்ரப் செய்து காட்டிய கவர்ச்சி,பொதுவான வழிமுறைகளினைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தலாம் அல்லவா? அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா எந்தளவு பொடு போக்காக செயற்படுகிறது என்பதை அறிய குறித்த ஒரு நிகழ்வினை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.மு.கா 2010 ம் ஆண்டில் அஷ்ரப் நினைவு தினத்தினையொட்டி பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் பேச்சுப் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.இறுதிச் சுற்று மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.இப் போட்டியில் முதல் இடத்தினைப் பெறுபவருக்கு 25000 ரூபாய் பணமும் குறித்த வெற்றியாளர் கல்வி கற்கும் பாடசாலைக்கு 10000ரூபாய் பெறுமதியான புத்தகங்களும் வழங்கப்படும் என மு.கா அறிவித்திருந்தது.இப் பேச்சுப் போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் ஏ.எஸ்.எம் றிழாகான் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தார்.இன்று வரை அந்த வெற்றியாளருக்கோ,பாடசாலைக்கோ மு.கா அறிவித்திருந்த வெற்றிப் பரிசு மு.காவினால் வழங்கப்படவில்லை.
வெற்றி பெற்ற மாணவன் தனக்குக் கிடைக்கப் போகும் பணத்திற்காக எத்தனை கற்பனைக் கோட்டைகளினை வரைந்து வைத்திருப்பான்? பாடசாலை மாணவர்களின் உள்ளங்களில் கூட ஆசை காட்டி மோசம் செய்த வேலையினைத் தான் இந்த மு.கா செய்துள்ளது.உண்மையில் 35000 ரூபாய் என்பது அமைச்சர் ஹக்கீமிற்கோ? அல்லது மு.காவிற்கோ? ஒரு பெரிய தொகைப் பணம் அல்ல.இந்த சம்பவம் மு.காவின் பொடு போக்குத் தன்மையினைத் தான் சுட்டிக் காட்டுகிறது.சாதாரணமாக தான் அறிவித்த அன்பளிப்பினை வழங்க கரிசனை கொள்ளாத மு.காவா முஸ்லிம்களின் உரிமைகளினை வென்று தரப்போகிறது? என யாராவது வினா எழுப்பினால் மு.கா தலைமை என்ன பதில் கூறப் போகிறது?
எனினும்,மு.கா அண்மைக் காலமாக தனது குறைகளினை தேடிக் கண்டு பிடித்து நிவர்த்திப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது.இதனை தற்போது தொடர்ந்து இடம்பெறுகின்ற மு.காவின் இளைஞர் மாநாடு,கண்டியில் மிகவும் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட மு.காவின் 26வது பேராளர் மாநாடு,பேராளர் மாநாடு நடத்தவென்றே ஒரு செயலாளரினை மு.கா நியமனம் செய்துள்ளமை,மரம் எனும் சஞ்சிகை வெளியிடுவதான கதை போன்றவை தெளிவாக சுட்டி நிற்கின்றன.இனியாவது மு.கா வளர்ச்சிப் பாதையில் பயணிக்குமா?
இறுதியாக மு.காவின் 26வது பேராளர் மாநாடு கண்டியில் நடைபெற்றிருந்தது.இதற்கு முன்பு நடாத்தப்பட்ட மாநாடுகள்,மாநாடுகள் நடாத்த வேண்டும் என்பதற்காக நடாத்தியது போல் தான் இருந்தது.எனினும்,கண்டியில் நடாத்தப்பட்ட பேராளர் மாநாடு மு.கா தனது கட்சியினை வளர்க்க நடாத்தியது போன்று இருந்தது.பேராளர் மாநாடு நடாத்தவென்றே ஒரு செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.இது மு.கா இவ் விடயத்தில் விழிப்புணர்வு அடைந்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.இது மு.காவின் வளர்ச்சி நோக்கிய பாதைக்கான திட்டமிடல் என்பதில் ஐயமில்லை.அஷ்ரப் மு.காவினை வளர்க்க பயன்படுத்திய வழி முறையான பேராளர் மாநாட்டினை நடாத்த அதிகம் கிழக்கு மாகாணத்தினையே தெரிவு செய்திருந்தார்.ஆனால்,அமைச்சர் ஹக்கீம்? 22வது பேராளர் மாநாடு சம்மாந்துறையில் நடைபெற்றது.23 வது பேராளர் மாநாடு வன்னியில் நடைபெற்றது.24வது பேராளர் மாநாடு தெஹிவளையில் நடைபெற்றது.25வது பேராளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. 26வது பேராளர் மாநாடு கண்டியில் நடைபெற்றது.இதனை வைத்துப் பார்க்கும் போது அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் வாழும் சனத்தொகை பரம்பலினைக் கருத்திற்கொண்டு மு.கா பேராளர் மாநாடு நடைபெறும் இடத்தினை தீர்மானித்திருந்தால் கூட மூன்று தடவைகளுக்கு ஒரு தரம் கிழக்கு மாகாணத்தில் இம் மாநாடு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலேயே மு.காவின் 22வது பேராளர் மாநாடு சம்மாந்துறையில் நடைபெற்றது.இதன் பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள்,கிழக்கு மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகியன இடம்பெற்றுள்ளன.இக் காலப்பகுதிக்குள் தேர்தல் வெற்றியினைக் கருத்திற்கொண்டு மு.கா பேராளர் மாநாடு விடயத்தில் கிழக்கு மாகாணத்தினை அதிகம் மையப்படுத்தி இருக்க வேண்டும்.குறைந்தது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியிலாவது கிழக்கு மாகாணத்தினை தெரிவு செய்திருக்கலாம்.அக் காலப்பகுதியில் மு.கா மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளதை ஒரு சாதூரியமான செயற்பாடாக கூற முடியாது.
தொடரும்…….
இக் கட்டுரை 01.12.2016ம் திகதி செவ்வாய்க் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.