பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமாரின் பணிப்புரைக்கமைய இடம்பெறும் குறித்த அதிரடி நடவடிக்கையின் பயனாக கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 01ம் திகதி நேற்று முன்தினம் வரை 73 மாடுகளை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் பிடித்துள்ளனர்.
மேற்படி கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களில் 9பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது பிடிக்கப்படும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையார்களிடம் சிறிய மாடு என்றால் 2500 ரூபாவும் பெரிய மாடு என்றால் 5000 ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்பட்டு அதன் பின்னர் குறித்த மாடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கட்டாக்காலி மாடுகளினால் அதிகமாக வீதி விபத்து இடம்பெறுவதாகவும் ,இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் அண்மையில் வேண்டுகோள் விடுத்ததன் பயனாக வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை தற்போது ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.