முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்குரிய சம்பளத்தையும் முன்னாள் ஜனாதிப திக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் படி மாதாந்தம் 4 இலட்சத்து 54,000 ரூபாவை வருவாயாக பெற்று வருவ தாகவும் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வூதியமாக மாதாந்தம் 3 இலட்சத்து 49 ஆயிரமும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமாக ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் பெற்று வருவதாகவும் சம்பளப்பட்டியலை பாராளுமன்றத்தில் காண்பித்த அமைச்சர் அரசாங்க ஊழியர் ஒருவர் இவ்வாறு செய்திருந்தால் அவரின் நிலைமை என்னவாகியிருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஒன்பதாம் நாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்திற்கு வந்து உரையாற்றாத முன்னாள் ஜனாதிபதி, விகாரைகளுக்குச் சென்று பட்ஜட்டை விமர்சித்து வருவதாக கூறிய அமைச்சர், முடிந்தால் இங்கு வந்து விவாதிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டின் கடன் சுமை அதிகரித்திருப்பதாக விகாரைகளுக்குச் சென்று மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அவரின் ஆட்சியிலே கடன் சுமார் 5 மடங்காக உயர்ந்தது. முடிந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தில் வந்து கூறட்டும். இங்கு 182 எம்.பிக்கள் பேசிய போதும் அவர் பேச வரவில்லை.
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்கள் சம்பளம் பெறுவதில்லை. ஆனால் இவர் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியம், சம்பளம் இரண்டையும் ஒன்றாக பெற்றுவருகிறார். அதற்கான ஆதாரங்களை சபையில் சமர்ப்பிக்கிறேன்.
மார்ச் மாதம் முதல் இவர் 54,285 ரூபா சம்பளம் அடங்கலாக ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபா பெற்று வருகிறார். இது தவிர மார்ச் மாதம் தொடக்கம் 97,500 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு, 50 ஆயிரம் ரூபா செயலாளர் கொடுப்பனவு, 2 இலட்சத்து 4 ஆயிரம் ரூபா எரிபொருள் கொடுப்பனவு அடங்கலாக 3 இலட்சத்து 49 ஆயிரம் ரூபா பெற்றுவருகிறார்.
இவரின் பாதுகாப்புக்கு 107 பொலிஸார், 550 இராணுவத்தினர் மற்றும் பல டசின் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.