பிரபல எழுத்தாளர் விக்கிரமன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார் !

20MPVIKRAMAN_24026g

  பிரபல எழுத்தாளர் விக்கிரமன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர், கடந்த வாரம் சிகிச்சை முடிந்து மேற்கு மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் உள்ள தனது வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று அவருடைய உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. பிற்பகல் 2.45 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.அவரது இறுதிச்சடங்குகள்  (புதன்கிழமை) மாலை நடக்கிறது.

விக்கிரமன் திருச்சியில் 1928-ம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை சி.சுப்பிரமணிய அய்யர், சுதேசமித்திரனில் மகாகவி பாரதியாருடன் பணியாற்றியவர். தாயார் பெயர் லட்சுமி அம்மாள். விக்கிரமனின் இயற்பெயர் வேம்பு.இளமையிலேயே எழுத்தார்வம் கொண்ட இவர் 1949-ல் ‘அமுத சுரபி’யில் சேர்ந்தார். 1951-ல் அதன் ஆசிரியரானார். தொடர்ந்து 52 ஆண்டுகள் அதன் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு ‘இலக்கிய பீடம்’ என்ற மாத இதழை நடத்தினார்.

நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம் என பல்வேறு துறைகளில் 64 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் 37 புத்தகங்கள், சரித்திர நாவல்கள். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு தொடர்ச்சியாக இவர் எழுதிய ‘நந்திபுரத்து நாயகி’ பல பதிப்புகள் கண்டது. பல எழுத்தாளர்களை உருவாக்கியவர், விக்கிரமன்.

மூத்த தமிழறிஞருக்கான ஆதித்தனார் விருதை 2012-ம் ஆண்டில் பெற்றவர், விக்கிரமன்.தமிழக அரசின் ‘கலைமாமணி’, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ‘தமிழன்னை’ விருதுகளையும் பெற்றவர்.

விக்கிரமனின் மனைவி பெயர் ராஜலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.