நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : வீரர் நாதன் லயனின் அவுட் இல்லை முடிவு தவறானது – ஐ.சி.சி. ஒப்புதல் !

 

897971869ICC 22

138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறியது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த டெஸ்டில் நடுவரின் ஒரு தவறான தீர்ப்பு தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சின் 2-வது நாளில் 8 விக்கெட்டுக்கு 116 ரன்களுடன் பரிதவித்தது. 9-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய நாதன் லயன் வந்த உடனே, சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரின் பந்து வீச்சில் முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்த போது, ‘ஸ்லிப்’பில் நின்ற கனே வில்லியம்சனிடம் பந்து சிக்கியது. ஆனால் நடுவர் எஸ்.ரவி அவுட் கொடுக்க மறுத்ததையடுத்து, நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், நடுவரின் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.) செய்யும் முறைப்படி ‘அப்பீல்’ செய்தார்.

டி.வி. ரீப்ளேயின் போது, ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து பேட்டின் பின்பகுதியில் லேசாக உரசுவது தெளிவாக தெரிந்தது. இதைபார்த்த லயன் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார். அதே சமயம் மற்றொரு தொழில்நுட்பமான ‘ஸ்னிக்கோ’ மீட்டரில் பந்து பேட்டை உரசியதற்கான சத்தம் ஏதும் பதிவாகவில்லை. இதனால் குழப்பமடைந்த 3-வது நடுவர் நைஜல் லாங் பேட்ஸ்மேன் நாதன் லயன் ‘அவுட் இல்லை’ என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். இதனால் லயனுக்கு மீண்டும் பேட் செய்யும் அதிர்ஷ்டம் கிட்டியது.

இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. விக்கெட் கீப்பர் பீட்டர் நெவிலும், நாதன் லயனும் அணியை மோசமான நிலைமையில் இருந்து மீட்டதுடன் 9-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். லயன் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 224 சேர்த்து, முன்னிலையும் பெற்றது. நடுவரின் முடிவு, நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் உள்பட பலரது விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில் 3-வது நடுவர் அளித்த தீர்ப்பு குறித்து ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருக்கிறது. அதில் ‘நாதன் லயனுக்கு அளிக்கப்பட்ட 3-வது நடுவரின் தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. அது தவறான தீர்ப்பு என்பதை ஒப்புக்கொள்கிறோம். நடுவர் சரியான நடைமுறைகளை தான் பின்பற்றி இருக்கிறார். ஆனால் தீர்ப்பை தவறாக அளித்து விட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.