அதிகாலை முதல் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் !

சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதற்கு முன்னர் 3 நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

bangalore-rain-two-Cropped

குறிப்பாக கடந்த 23–ந்தேதி அன்று மாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக சாலைகள் ஆறாக மாறியது. அனைத்து ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அன்று மாலையில் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மறுநாள் காலையில் தான் வீடுகளுக்கு சென்றனர்.

அதன் பின்னர் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த ஒரு வாரமாக மழை கொஞ்சம் ஓய்வெடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது.

23–ந்தேதி கொட்டி தீர்த்தது போல, இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதனால் ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் சூழ்ந்தது. மழை பாதிப்பில் இருந்து கொஞ்சம் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த சென்னை வாசிகளை இந்த மழை மீண்டும் புரட்டிப்போட்டது.

கோயம்பேடு, ஆழ்வார் திருநகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

chennai1-rains

இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன.

கிண்டி கத்திப்பாரா பாலம் அருகில் உள்ள ஐ.டி. நிறுவனங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பணிபுரிந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்தே அலுவலங்களுக்கு சென்றனர்.

கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் ஆகியவற்றிலும் வெள்ளம் தேங்கியது. கவர்னர் மாளிகையையொட்டிய சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்த வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின. தரமணி டைடல் பார்க் எதிரில் சாலையில் திடீர் நிரூற்று ஏற்பட்டது. இதனை பொது மக்கள் மிரட்சியுடன் பார்த்துச் சென்றனர்.

சிந்தாதிரி பேட்டை போலீஸ் நிலையம் அருகில் மழை வெள்ளத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னையில் இன்று காலையில் கொட்டித் தீர்த்த கனமழையால், கடந்த 23–ந்தேதி ஏற்பட்டது போன்றே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகள் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆனது. மழை வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இன்று காலையில் அலுவலகங்களுக்கு சென்றிருந்த பலர், நல்ல படியாக மாலையில் வீடு திரும்ப முடியுமா? என்கிற கவலையுடனேயே காணப்பட்டனர்.