அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனநாயகம் வென்றெடுக்கப்பட்டதாக கூறுவது தவறானது. சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
19ஐ காரணம்காட்டி பொதுத் தேர்தலுக்கு செல்ல ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது . 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறாது பாராளுமன்றத்தை கலைக்க விடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்றப்பட்டுள்ள 19ஆவது திருத்தச் சட்டம் வரவேற்கத்தக்க விடயமே . அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டிருப்பது நாட்டின் அரசியல் கலாசாரத்தை மீண்டும் பாதுகாத்துள்ள வகையிலே அமைந்துள்ளது. எனினும் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியவுடன் அதைமட்டுமே கவனத்தில் கொண்டு செயற்படாது அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் . ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப்பதனால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் ஏற்படப் போவதில்லை.
சுயாதீன சேவைகள் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலமே முழுமையான வெற்றியாக மாற்றியமைக்க முடியும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களின் ஆதரவுக் கட்சிகளும் 19ஆவது திருத்தத்தை மட்டும் நிறைவேற்றி அதனூடாக சுயநல அரசியலை செய்ய முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்.
ஐக்கிய தேசியக் கட்சி நினைப்பதைப் போல் இப்போது பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லும் முயற்சியை நாம் விரும்பவில்லை. 19ஆவது திருத்தச் சட்டம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டதோ அதேபோல் தேர்தல் முறைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் 20ஆவது திருத்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அது வரையில் நாம் பாராளுமன்றத்தை கலைக்க அனுமதிக்க மாட்டோம்.
ஆரம்பத்தில் நாம் 19ஆவது திருத்த சட்டமூலத்தினைப் போல் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினையும் ஒன்றாக கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைக்கமையவே செயற்பட்டோம். ஆனால் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமையவும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் அவசியத்திற்கு அமையவே நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தோம். ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமென ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதற்கமைய கட்டாயம் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியாக வேண்டும்.
மேலும் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பிலும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஊடக அடக்குமுறைகள் தொடர்பில் 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் சரத்துக்கள் முன்வைக்கப்பட்டதைப் போல ஏனைய சுயாதீன சேவைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தவும் இவர்கள் முயற்சிக்கலாம். அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை அரசாங்கமாக நாம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் வேலையை நாம் செய்தாக வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.