இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 20 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றபோது முஸ்லிம் பிரிவின் சிரேஷ்ட தயாரிப்பாளரான மபாஹிர் மௌலானாவுக்கு தங்க நாயணமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1994 – 09 – 01 நியமனம் பெற்ற இவர் அன்று முதல் சுமார் 21 வருட காலமாக ரூபவாஹினி கூட்டுத்தபனத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிகள் பிரிவினில் சிரேஷ்ட தயாரிப்பாளராக, முஸ்லிம் நிகழ்சிகள் மற்றும் நேத்ரா எக்ஸ்பிரஸ் எனும் புதிர் வினா விடை நிகழ்ச்சி மற்றும் கல்வி நிகழ்சிகளையும் தயாரித்து வருகின்றார்.
முஸ்லிம்களின் விசேட தினங்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் மீலாதுன் நபி தினங்களில் இஸ்லாமிய மற்றும் குடும்ப நாடங்களை 2000 ஆம் ஆண்டு முதல் தயாரித்து வழங்கி வருகின்றார். இவர் இயக்கத்திலும் தயாரிப்பிலும் ஒளிபரப்பப்பட்ட 14 நாடகங்களில் 2013 இல் ஒளிபரப்பப்பட்ட “திருப்பங்கள்” மற்றும் “அலவக்கரை” என்ற நாடகங்கள் அரச தொலைக்காட்சி விருதுக்காக தெரிவு செய்யப்பட்டு அலவக்கரை என்ற நாடகம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஓரங்க தமிழ் நாடகம் என்ற விருதை பெற்றது.
இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டும் இவருடைய “மௌனத்தின் புன்னகை” என்ற நாடகமும் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னாள் செனட்டர், கல்முனை மேயர், பிரபல அரசியல் வாதியுமான எஸ்.இஸட். எம்.மசூர் மௌலானாவின் 3 ஆவது புத்திரராவார்.