முதலாவது பகலிரவு டெஸ்ட் அவுஸ்திரேலியா வசம்!

 

895945062Untitled-1

சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதலாவதாக இடம்பெற்ற பகல் இரவு போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. 

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

இதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோம் லதாம் (Tom Latham) அதிக பட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

ஏனைய வீரர்கள் எவரும் அரைச்சம் கூட பெற முடியாது வரிசையாக வௌியேற, 65.2 ஓவர்களை எதிர்கொண்ட நிலையில் 202 ஓட்டங்களைப் பெற்ற வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது நியூஸிலாந்து. 

இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சார்பில் பீட்டர் நெவில் 66 ஓட்டங்களையும் ஸ்மித் 53 ஓட்டங்களையும் விளாசினர். 

பின்னர் 224 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை அந்த அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதன்படி 22 ஓட்டங்களால் ஆஸி அணி முன்னிலையில் இருக்க தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த நியூஸிலாந்து சார்பில் எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் அடுத்தடுத்து நடையைக் கட்ட, அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 

இதனையடுத்து 187 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2-வது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலியா போட்டியின் மூன்றாம் நாளான இன்று 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இலக்கை எட்டி (187) வெற்றி வாகை சூடியுள்ளது. 

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-0 என அவுஸ்திரேலியா வசமாகியுள்ளது.