டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஏதேனும் பறந்தால், சுட்டுத்தள்ள பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈராக், சிரியா மட்டுமல்லாது லெபனான், எகிப்து, பிரான்ஸ் என பல உலக நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கால் பதித்து, நாசவேலைகளை அரங்கேற்றி, உலகுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்.கடந்த 13-ந் தேதி பாரீஸ் நகரில், மும்பை பாணியில் தொடர் தாக்குதல்கள் நடத்தி 130 பேர் கொன்று குவிக்கப்பட்டதற்கும் அவர்களே பொறுப்பேற்று உள்ளனர்.
பாரீஸ் தாக்குதல் போன்று உலகின் பல நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோஹரம் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா சில தினங்களுக்கு முன் எச்சரித்தது. உலக நாடுகளில் பயணம் செய்யக்கூடிய அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உஷார்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் வான்வழி தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
டெல்லியில் 15 முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி பங்களா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீடு, ராஜபாதை, இந்தியா கேட், சி.பி.ஐ., மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை தலைவர்கள் அலுவலகங்கள் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலக வளாகம் (சிஜிஓ வளாகம்) ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறி உள்ளன.
யு.ஏ.எஸ். என்னும் ஆளில்லாத வான் தாக்குதல் அமைப்பு, ஆளில்லா விமானம், பாராமோட்டார் ஆகியவற்றை கொண்டு தாக்குதல்களை நடத்தலாம் என தெரிய வந்துள்ளது.
எனவே சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் விண்ணில் பறக்கும் எந்தவொன்றையும், இந்திய விமானப்படையின் ஆலோசனை பெற்று உடனே சுட்டுத்தள்ளுமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்லி விமான நிலையத்தில், சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு ஆளில்லாத விமானம் பறந்தது தெரியவந்தது. ஆனால் அது தொடர்பான எந்த விவரத்தையும் பாதுகாப்பு அமைப்புகளால் இதுவரை சேகரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.