சகிப்பின்மை குறித்து பாராளுமன்றத்தில் திங்கள் விவாதம் : காங்கிரஸ், மார்க்சிஸ்ட் நோட்டீசு ஏற்பு !  

Parliament house in New Delhi on July 24th 2015. Express photo by Ravi Kanojia.

 சமீபகாலமாக நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் நடந்த மாட்டிறைச்சி பிரச்சினை, கர்நாடகாவில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறி வரும் காங்கிரஸ், மார்க்சிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் என்று கோரி வந்தன.

இதனிடையே அண்மையில், பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனக்கு, குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறும் உணர்வு தோன்றி இருப்பதாக தெரிவித்ததால் சகிப்பின்மை பிரச்சினை மீண்டும் பரபரப்பானதாக மாறியது. இதனால் இப்பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

இது குறித்து பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில், தாத்ரி, கன்னட எழுத்தாளர் படுகொலை ஆகிய 2 சம்பவங்களையும் மத்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது. அதே நேரம் அவை மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலும் அது பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. பி.கருணாகரன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் ஆகியோர் சகிப்பின்மை குறித்து விதி 193-ன் படி பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கவேண்டும் என்று கூறி சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

அவர்கள் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு சகிப்பின்மை குறித்து நாளை(திங்கட்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதலும் அளித்தார். இதனால் நாளைய பாராளுமன்ற கூட்டத்தில் சகிப்பின்மை பிரச்சினை பற்றி காரசார விவாதம் நடைபெறும் என்பது நிச்சயம்.

பாராளுமன்ற விதி 193-ன் படி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்து ஓட்டெடுப்பு நடத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.