இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி இலங்கை மண்ணில் மோதல் !

India-vs-Pakistan-series-2012-13-schedule-Match-time-table-ground-details

 நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2008 மும்பைத் தாக்குதலின் பின் இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதியளிக்கவில்லை. ஐ. சி. சி. யினால் நடத்தப்படும் தொடர்களில் மட்டும் இரு அணிகளும் விளையாடி வந்தன. கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு இரு அணிகளும் இந்திய மண்ணில் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் சந்திக்கவில்லை. 

ஆனால் கடந்த காலங்களில் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டதால் ஐ. சி. சி. யின் போட்டி அட்டவணைப்படி அடுத்த தொடர் பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது லாஹ¥ரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் சர்வதேச அணிகள் அங்கு சென்று விளையாட மறுத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. எனவே பாகிஸ்தான் நாட்டில் நடைபெற வேண்டிய தொடர்கள் கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் டிசம்பர் மாதத்தில் நடைபெற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த காலங்களில் பாகிஸ்தான் – இந்திய எல்லைக் கிராமங்களில் ஏற்படும் ஊடுருவலினாலும் அடிக்கடி எல்லையில் ஏற்படும் துப்பாக்கிப் பிரயோகத்தினாலும் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது. எனவே, இத் தொடர் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்தது.

மேலும் பாகிஸ்தானுடன் எதுவிதத் தொடர்புகளும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடக் கூடாது என்றும் சிவசேனா அமைப்பினர் அறிக்கைகள் விடுவதிலும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதிலும் மும்முரமாய் ஈடுபட்டு வந்தனர். இதன் உச்சகட்டமாக இந்திய கிரிக்கெட் சபை உயர் அதிகாரிகளினால் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்திய- பாகிஸ்தான் தொடரை டிசம்பரில் நடத்துவதற்கு ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை மும்பையில் ஏற்பாடு செய்திருந்தனர். அவ்வாலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஆனால் சிவசேனா அமைப்பினரால் இக்கூட்டத்தை நடைபெறவிடாமல் ஆர்ப்பாட்டம் செய்து குழப்பியதால் கூட்டம் ரத்தானது.

இதனால் சற்று கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகள் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் டுவெண்டி-20 உலகக் கிண்ணத் தொடரையும் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனர். இதனால் இத்தொடர் இனிமேல் நடைபெறாது என்ற முடிவுக்கே இரு நாட்டிலுமுள்ள கோடிக்கணக்கான இரசிகர்களும் எண்ணியிருந்தனர். இருந்தும் கிரிக்கெட்டை நேசிக்கும் முன்னாள், இந்நாள் வீரர்கள் இத்தொடர் நடைபெற வேண்டும் என்ற தொனியில் பல கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர். முக்கியமாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் தலைவருமான சுனில் கவஸ்கார் இத்தொடர் கட்டாயமாக நடைபெற வேண்டும். கிரிக்கெட்டினால்தான் இரு நாடுகளுக்கிடையில் நல் உறவை கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்துப்பட பத்திரிகைகளில் எழுதியிருந்தார்.

அதன் பிறகு இம்மாத ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் இத் தொடர் நடைபெற வேண்டுமெனில் எங்கள் அணியினரை பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது. ஆனால் இத் தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்ற ரீதியில் முயற்சிகள் செய்யப்பட்டன. இதற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுத்தது. இத் தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி மத்தியஸ்த நாடான ஐக்கிய இராச்சியத்தில்தான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தது. இத் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் நடைபெறுவதால் போட்டிகள் நடைபெற வேண்டிய இடத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்ற தோரணையில் கருத்துக்கள் வெளியிட்டனர்.

இப் போட்டித் தொடர் நடைபெறும் என்ற நிலை வந்ததும் போட்டிகள் நடைபெறும் இடம் பற்றிய சர்ச்சை எழுந்து ரசிகர்கைளக் குழப்பியது. கடைசியாக இப் பிரச்சினைக்கு முடிவுகட்டும் முகமாக கடந்த வாரம் டுபாயிலுள்ள ஐ. சி. சி. தலைமையகத்தில் இரு நாட்டு கிரிக்கெட் சபை நிர்வாகிகளும் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இத் தொடர் இந்தியாவில் நடைபெறுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை. ஆனால் ஏதாவது ஒரு மத்தியஸ்த நாடொன்றில் நடைபெற வேண்டுமென்று விரும்பினர். இந்தியாவும் மத்தியஸ்த இடமென்றால் ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தவிர்ந்த வேறு இடத்தில் விளையாட சம்மதம் தெரிவித்தது. இறுதியில் பங்களாதேஷ், இலங்கை ஆகிய இரு நாடுகளும் சிபாரிசு செய்யப்பட்டது. இதில் இலங்கையை இரு நாட்டு கிரிக்கெட் சபையும் தேர்வு செய்தன.

இதனடிப்படையில் இம்முடிவை பாகிஸ்தான் பிரதமரும் வரவேற்றுள்ளார். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இத் தொடர் அனேகமாக இலங்கையில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இத்தொடரை இலங்கையில் நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை பூரண சம்மதம் தெரிவித்துள்ளது. இப்போட்டிகளுக்காக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானமும் கண்டி பல்லேகல மைதானமும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.