மோடியின் தேநீர் விருந்துக்கு காரணம் பொதுமக்களின் அழுத்தம்தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இன்று மாலை பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருவருக்கும் மோடி சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் “எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்பது மிகவும் இயல்பான விஷயம். ஆனால் தற்போது சோனியா மற்றும் மன்மோகன் சிங் இருவரையும் தேநீர் விருந்துக்கு அழைத்திருப்பதற்கு காரணம் பொதுமக்களிடமிருந்து வந்த அழுத்தம்தான். மேலும் இது போன்று செயல்படுவது மோடியின் வழக்கம் இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜி.எஸ்.டி.) நாங்கள் தான் கொண்டுவந்தோம். அதை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்த நெருடலும் இல்லை. ஆனால், நாங்கள் முன்வைக்கும் 3 முக்கிய திருத்தங்களை செய்யவேண்டும். ஏழைகள் மீது வரிவிதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை (30–ந்தேதி) முதல் பாராளுமன்றத்தின் வழக்கமான அலுவல்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்பட 20 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் மத்திய அரசு உள்ளது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் சகிப்பின்மை மற்றும் இட ஒதுக்கீடு உள்பட சில பிரச்சனைகளை எழுப்பி குளிர்கால கூட்டத்தொடர் முழுவதையும் முடக்க தயாராகி வருகின்றன. இதனால் குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ள வகையில் நடைபெறுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதற்கு தீர்வு காண்பதற்கான புதிய முயற்சியாக டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பு தேநீர் விருந்து ஒன்றுக்கு மோடி ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 1½ ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக காங்கிரசை விருந்துக்கு அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.