மத்திய குழுவினர் காலம் கடந்து வந்து இருக்கிறார்கள் : மு.க.ஸ்டாலின் பேட்டி !

stalin

 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்தியக்குழு ஆய்வு நடத்த வந்திருக்கிறது. அதுபற்றிய உங்கள் கருத்து?

பதில்:- மத்தியக்குழு வந்திருப்பது வரவேற்கக்கூடியது ஆனால் காலம் கடந்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் காலம் கடத்தாமல் இந்தக்குழு முறையாக ஆய்வு செய்து ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னது போல ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் அனைத்துக் கட்சி குழுக்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து அதன் மூலமாக நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்களேயானால், அரசின் நிவாரணம் முறையாக மக்களுக்கு போய்ச்சேரும்.

இல்லையென்றால் அ.தி.மு.க. தன்னிச்சையாக அதைக் கையிலெடுத்துக் கொண்டு, வரவிருக்கக் கூடிய தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையிலேதான் அவர்கள் கடமையாற்றுவார்கள் என நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

கேள்வி:- “நமக்குநாமே” பயணம் சென்னையில் எப்போது நடைபெறும்?

பதில்:- ஏற்கனவே 212 தொகுதிகளில் அந்தப்பணியை நான் முடித்திருக்கிறேன். மிச்சமிருக்கக்கூடிய, சென்னையை ஒட்டியிருக்கக் கூடிய சட்டமன்றத்தொகுதிகளில் விரைவில் ‘நமக்கு நாமே’ பயணத்தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. உறுதியாக 234 தொகுதிகளிலும் அந்தப்பணியை நிறைவேற்றுவோம்.

கேள்வி:- ஆனந்த விகடன் மீது அவதூறு வழக்கு பாய்ந்திருக்கிறதே?

பதில்:- குறிப்பாக பல்வேறு அவதூறு வழக்குகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதும், என் மீதும், அதேபோல பல அரசியல் கட்சித்தலைவர்கள் மீதும் இந்த ஆட்சி போட்டுக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் தலைவர் கருணாநிதியோ, நானோ அல்லது தி.மு.க.வில் இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்களோ கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதை சந்திக்க நாங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம்.

இன்றைக்கு ஒரு பொதுவான, நடுநிலை ஏடாக இருக்கக்கூடிய ஆனந்த விகடன் பத்திரிகை மீதும் வழக்குப் போட்டிருப்பது மட்டுமல்ல, அந்தப் பத்திரிகை எந்தக்கடைகளிலும் இருக்கக்கூடாது என்று விற்பனையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஏஜென் சிகள் மிரட்டப்படுகிறார்கள். கடை வைத்திருக்கக் கூடியவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்களுடைய பேஸ்புக்கும் தடை செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கிறபோது, தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, அல்லது நாம் நெருக்கடிக்காலத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம்தான் வந்திருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.