டெல்லியில் தனியார் வங்கியின் பணம் ரூ.22.5 கோடியுடன் ஓட்டம் பிடித்த வேன் டிரைவர் !

van_00f5dbb8-945e-11e5-b13b-1ee01ddf34ff

 டெல்லியில் தனியார் வங்கியின் பணத்தை எடுத்துச் சென்ற வேன் டிரைவர் ரூபாய் 22.5 கோடியுடன் தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தனியார் வங்கி ஒன்று தெற்கு டில்லியில் உள்ள தன்னுடைய வங்கி கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதற்காக வினய் பட்டேல் என்ற துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் மற்றும் பிரதீப் சுக்லா என்ற டிரைவருடன் அனுப்பி வைத்தது. இருவரும் ரூ.22.5 கோடி பணத்துடன் வண்டியில் சென்று கொண்டிருந்தனர். 

இடையே ஓய்விற்காக வினய் பட்டே என்ற அந்த பாதுகாவலர் வண்டியை கோவிந்த்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தியுள்ளார். பின்னர், அருகில் ஒரு வளையில் காத்திருப்பதாக சொல்லி அந்த டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய அந்த பாதுகாவலர் திரும்பி வந்து பார்த்த போது பிரதீப் சுக்லா என்ற அந்த டிரைவரையும் வண்டியையும் காணவில்லை.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர், வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வங்கி அதிகாரிகள் கோவிந்த்புரி காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டபோது, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் வேனை போலீசார் மீட்டனர். ஆனால் வேனில் இருந்த பணத்துடன் டிரைவர் தப்பிச் சென்றார். பணத்துடன் மாயமான டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.