அஸ்ரப் அலி – சம்மாந்துறை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்குச் சொந்தம் என்ற போட்டி அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பாக விமர்சிக்கப்படும் ஒருவிடயமாக மாறியுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவரான உங்களை மக்கள் செல்வாக்கற்ற சிலர் போட்டி போட்டு விமர்சிக்க முற்படுவதை அவதானித்ததன் பின்பே உங்களுக்கு இந்த பகிரங்க மடலை எழுத என்மனம் தூண்டியது.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் நேரடி அரசியலுக்குள் குதித்த தாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் இற்றைவரை தமது மக்களுக்காக அரசியலை செய்து வருகின்றீர்கள்.
சமுகத்திற்காக தனது நிம்மதியை இழந்து, சுதந்திரத்தை இழந்து தொடர்ச்சியாக 15 வருடங்கள் துயரமிக்க அரசியலை செய்து வருகின்ற அரசியல்வாதியை இனம் காட்டுங்கள் என்றால் அந்த நபர்; உங்களை தவிர வேறு எவருமாக இருக்கமாட்டார்கள்.
வடமாகாண முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை சாதாரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று பிரபாகரனுடன் ரவூப் ஹக்கீம் ஒப்பந்தம் செய்ததாலும் வடக்கு இளைஞர்கள் 100பேருக்கு முகாம் அதிகாரிகள் என வடக்கின் அரசியல் வரலாற்றிலேயே முதற் தடவையாக அரச நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் அந்நியமனங்கள் பிற்காலத்தில் ஒழிக்கப்பட அரசு முனைந்த வேளையில் தான் ரவூப் ஹக்கீமின் மௌனத்தை கண்டித்து அக்கட்சியிலிருந்து வெளியேற தீர்மானித்தீர்கள்.
இதனை மனச்சாட்சியோடு அனைவரும் ஏற்றுக் கொள்வர். இவ்வேளையில் தான் முகாவுக்கு மாற்றீடாக முஸ்லிம் கட்சி ஒன்றின் அவசியம் உணரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள், உலமாக்கள், கல்விமான்களின் வேண்டுகோளுக்கு அமைய அ.இ.ம.கா என்ற கட்சியை உருவாக்க தீர்மானித்தீர்கள்.
அ.இ.ம.கா என்ற கட்சி இன்று ஆலம் விருட்சம் போல் பரந்து விரிந்துள்ளது. உங்களுடனும் அமீர் அலியுடனும் பாராளுமன்ற பிரதிநித்துவம் என்ற ரீதியில் உருவான அ.இ.ம.கா கடந்த பொதுத்தேர்தலுடன் முஸ்லிம்களின் பெரும்பான்மையினரின் ஆதரவைப்பெற்ற தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
30வருட அனுபவம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸை விஞ்சிய அளவில் இன்று அ.இ.ம.கா வின் செல்வாக்கு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பரவியுள்ளது. அனுராதபுர முஸ்லிம்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத தேர்தல் வியூகத்தை அமைத்து அம்மாவட்டத்திற்கு முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெற்றுக் கொடுத்தீர்கள்.
25 வருடங்களாக அரசியலில் அநாதைகளாக இருக்கும் புத்தள முஸ்லிம்களுக்கு பாராளுமன்ற அரசியல் அந்தஸ்தை இத் தேர்தல் மூலம் பெற்றுக் கொடுத்தீர்கள். வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே ஒரு காரணத்திற்காகவும் இந்த நிமிடம் வரை அந்த மக்களை தனது சொந்த உறவுகளாக நினைத்து அரவணைக்கும் போக்குக்கு நன்றிக் கடனாகவுமே உங்களது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியலை புத்தளத்திற்கு வழங்கினீர்கள்.
உண்மையில் உங்களது தீர்க்க தரிசனமான முடிவு முஸ்லிம்கள் மத்தியில் உங்களை ஒரு படிமேல் உயர்த்திக் காட்டியது.
அ.இ.ம.கா என்ற கட்சியின் தலைவராகவும் உங்களின் தனிப்பட்ட ஆளுமை மூலமாகவும் கட்சியை பலப்படுத்திய நீங்கள் உங்களின் முடிவு எதுவோ அதுவே சமுகத்தின் முடிவாக இருக்கும் என்ற அச்சமான ஒரு சூழ்நிலைக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த எண்ணுமளவுக்கு கொண்டு சென்றீர்கள்.
இலங்கை முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்தைக் கொண்டு அதனை செய்தும் காட்டினீர்கள்.
முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதை தடுப்பதைத் தவிர வேறு எந்தவொரு நிபந்தனையும் தேவiயில்லை என்ற புனிதமான நிய்யத்தோடு மைத்திரியுடன் இணைந்து அவரை பெற்றி பெறச் செய்தீர்கள்.
உண்மையில் இதற்கு முஸ்லிம் சமுகம் நன்றியை தெரிவிப்பதோடு இறைவனிடத்திலும் உங்களுக்கு உன்னதமான அந்தஸ்து கிடைக்கவும் பிரார்த்திற்கின்றோம்.
இவ்வாறெல்லாம் ஆளுமை மிக்க செயற்பாடுகளை முன்னெடுத்த நீங்கள், பெரும்பாலான முஸ்லிம்களால் தலைவராக பார்க்கப்படுகின்ற நீங்கள், முகவரியற்ற – மக்கள் செல்வாக்கற்ற ஒரு சில புல்லுருவிகளுடன் அ.இ.ம.கா என்ற கட்சிக்காக போட்டியிடுவதை நினைக்கும் போது எமக்கு வேதனையைத் தருகின்றது.
முகாவை விட்டு வெளியேறியவர்கள் பலர் அரசியலிலிருந்தே தூரமாக்கப்பட்டது அந்தக் காலம். ஆனால் அ.இ.ம.கா விலிருந்து வெளியேறியோர் அரசியல் முகவரி அற்றுப்போவது இந்தக் காலம்.
அ.இ.ம.கா விலிருந்து வெளியேறிய ஹிஸ்புல்லாஹ் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து நிபந்தனை அடிப்படையில் தேசியப்பட்டியல் பெற்று அமைச்சராகியுள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் நிஜாமுதீன் முகவரியே அற்றுப் போய்விட்டார். நஜீப் அப்துல் மஜீத் இருக்குமிடமே தெரியாது. 850 வாக்குகளைக் கூட பெறமுடியாத ஒருவரை உங்களதும் அமீரலியினதும் பலத்தின் மூலம் இரண்டாவது முறையும் மாகாண சபை உறுப்பினராக்கினீர்கள். அவர் தான் ஏறாவூர் சுபைர் என்பவர்.
இப்போது இறுதியாக வந்திருப்பவர் தான் அ.இ.ம.கா தனக்கே சொந்தம் என போட்டி போடும் வை.எல்.எஸ். ஹமீட் என்பவர். வை.எல்.எஸ். ஹமீடின் செல்வாக்கு என்ன என்பதை அனைவரும் அறிவார்கள்.
அ.இ.ம.கா வின் செயலாளராக பத்து வருடமாக இருந்து அவரது கல்முனைத் தொகுதியில் நூறுபேரைக் கூட திரட்ட முடியாத செல்வாக்குள்ளவர் அவர். கல்முனை மாநகர சபைத் தேர்தல் விரைவில் இடம்பெற விருக்கும் நிலையில் முடிந்தால் அவர் போட்டியிட்டு வெற்றயீட்டிக் காட்டட்டும்.
எனவே இவ்வாறெல்லாம் மக்கள் செல்வாக்கும் ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும் நிலையில் அ.இ.ம.கா என்ற ஒரு நாமத்திற்காக நீங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது பொதுமக்களாகிய எங்களுக்கு வேதனையைத் தருகின்றது என்பதை மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அ.இ.ம.காவுக்கு மக்கள் வாக்களித்தது என்பது அல்லது அ.இ.ம.கா சார்பான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்தது என்பது ரிசாத் பதியுதீன் என்னும் ஆளுமைக்காகவே.
இதனை முதலில் நீங்கள் புரிந்து அறிந்து கொள்ள வேண்டும். ரிசாத் பதியுதீன் நாளை வேறொரு கட்சியை ஆரம்பித்தாலும் தற்போதுள்ள அதே செல்வாக்குத்தான் அதே ஆதரவுதான் அந்த புதிய கட்சிக்கும் கிடைக்கும் என்பதை தயவு செய்து நீங்;கள் அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் கட்சி என்பது மார்க்கமும் அல்ல மதமும் அல்ல என்று. அந்த அடிப்படையில ;நோக்கும் போது அ.இ.ம.கா என்ற நாமத்திற்கு மக்கள் ஆதரவில்லை. மாறாக ரிசாத் பதியுதீன் என்ற நாமத்திற்கே மக்கள் ஆதரவு என்பது இனியாவது நீங்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மட்டுமன்றி தீர்க்கமான ஒரு முடிவுக்கும் வரவேண்டும்.
எனவே இறுதியாக அமைச்சர் அவர்களே இந்த நாட்டு முஸ்லிம்கள் சர்பாக நாம் வேண்டிக்கொள்வது என்னவெனில் , இந்த நாட்டில் ஆளுமையற்ற தலைமைகளைக் கொண்ட கட்சிகள் பல உள்ளன. அந்தக் கட்சிகள் எல்லாம் மக்கள் செல்வாக்கற்ற கட்சிகள். அதே வேளை அ.இ.ம.கா கட்சிதான் எமக்கு வேண்டும் என்று நாம் ஒரு போதும் உங்களிடம் கேட்கவுமில்லை. அது எமக்கு அவசியமுமில்லை. நாம் கேட்பதெல்லாம் உங்கள் ஆளுமையையே. முகவரியற்றவர்களின் வாய்ச்சாடலுக்கு இரையாகிவிடாதீர்கள் என்பதையே.
நாளை நீங்கள் எத்திசையை நோக்கி கைநீட்டுகின்றீர்களோ அத்திசையை நோக்கி பயணிப்பதற்கு அ.இ.ம.கா போராளிகளும் முஸ்லிம் சமுகமும் தயாராகி இருக்கின்றது என்பதை உங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.
அதே நேரம் நீங்கள் வழங்கிய உயர் பதவிகளில் அமர்ந்து, சொகுசு வாகனங்களில் பயணித்து ஆடம்பர இல்லங்களை வடவமைத்த ஒரு சிலர் – கடந்த 10 வருடங்களாக மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட உங்களது பொருளாதாரத்தை அற்பணித்து உருவாக்கப்பட்ட இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை இலகுவில் விட்டுக் கொடுப்பதற்கு போராளிகளும் முஸ்லிம் சமுகமும் தயாரில்லை என்பதையும் இந்த இடத்தில் உங்களுக்கும் கட்சியைப் பறிக்க முனைபவர்களுக்கும் பகிரங்கமாக கூறிவைக்க விரும்புகின்றோம்.