புலிகளை விடுவிக்க அரசாங்கத்திற்கு எந்தவிதத் தேவையும் இல்லை : சம்பிக்க ரணவக்க !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ வடக்கு மக்களாலோ நாட்டில் குழப்பம் வரவில்லை மஹிந்தவை ஆதரிக்கும் அணியினரே நாட்டை பிரிக்க முற்படுகின்றனர். தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க ஜனாதிபதியோ பிரதமரோ இடமளிக்கமாட்டார்கள் என ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். புலிகளை விடுவிக்க அரசாங்கத்திற்கு எந்தவிதத் தேவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

champika_Ranawaka_0

அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்துள்ள நிலையில் , இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தில் இருந்த அரசியல் நிலைப்பாடுகளும், அரசியல் கொள்கைகளும் இன்று நாட்டில் இல்லை. கடத்த பத்து ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய போராட்டங்கள் பிரிவினைக்கான அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் மாறியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் மூலம் நாட்டில் ஏற்பட்ட பிரிவினைவாத கொள்ளை அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு போராட்டங்களில் இருந்து இன்று நாடு விடுபட்டுள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் நாம் மிகமுக்கிய பங்கினை செலுத்தியுள்ளோம், அதேபோல் அப்போது அரசாங்கத்தில் இருந்த இன்னும் சிலரின் பங்கும் முக்கியமானதாகவே காணப்பட்டது. அவ்வாறு ஒரு அழுத்தம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்காவிட்டால் இன்றும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் யுத்தத்தின் பின்னரும் மஹிந்த அரசாங்கத்தின் போக்கும் மிக மோசமானதாகவே இருந்தது. விடுதலைப் புலிகளினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பலமடங்கு இழப்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்திக்க நேர்ந்தது. நாம் அரசாங்கத்தில் இருக்கும்போதே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவோ அவரது சகோதரர்களோ எமது ஆலோசனைகளை கேட்டகவில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட வெற்றிக்களிப்பில் மட்டுமே அவர்களின் செயற்பாடுகள் அமைந்தது. ஆகவே தான் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த ஜனநாயகத்தின் பக்கம் எமது பங்கினை வழங்கினோம். யுத்தத்தை வெற்றிகொள்ள உதவியதைப்போல் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் ஆட்சிமாற்றதிலும் எமது பங்கு உள்ளது.

மேலும் இன்று நாட்டில் பிரிவினைவாத செயற்பாடுகள் எதுவும் இல்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமது முரண்பாடுகளை மறந்து ஒன்றாக வாழ தயாராகியுள்ளனர். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது இறுக்கமான கொள்கைகளை தகர்த்து நாட்டை ஒன்றிணைந்த பாதையில் முன்னெடுத்து செல்ல தாயராகவே உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. அதேபோல் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அவர்கள் ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையில் தான் செயற்பட்டனர். அத்தோடு யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய ஜனநாயக உரிமைகள் இருந்தன. வடக்கில் அனாவசிய ஆக்கிரமிப்புகளை குறைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மக்களால் நாட்டில் அச்சுறுத்தலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்தக் கருத்து எந்த விதத்திலும் உண்மையில்லை. இன்று நாட்டில் இனவாதத்தை பரப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒரு சிலரின் செயற்பாடுகளையும் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் பார்க்கும்போது அவர்களினால் தான் நாட்டில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மஹிந்தவை ஆதரிக்கும் அணியினரே நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலை, புலம்பெயர் அமைப்புகளின் தடை நீக்கம் சர்வதேச தரப்பினரின் விஜயம் ஆகியவற்றை வைத்து நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். விடுதலைப் புலிகளை விடுவிக்கும் நோக்கம் அரசாங்கதிற்கு இல்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான யாரையும் நாட்டினுள் அனுமதிக்கவும் நாம் தயாராக இல்லை. அவர்கள் இனவாதத்தை பிரதானப்படுத்தி நாட்டில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் தேசிய பாதுகாப்பு ஜனாதிபதியின் கையில் உள்ளது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியில் உள்ள ஒருசிலரே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஆனால் இதில் எந்தவித உண்மைகளும் இல்லை. இன்று நாடு சரியான பாதையில் பயணிக்கின்றது. இதில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து தேசிய பயணத்தை நாம் முன்னெடுக்கின்றோம். அதேபோல் ஜனாதிபதியோ பிரதமரோ நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.