இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் : சமந்தா உறுதி

1765324202Untitled-1
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கை வந்துள்ள சமந்தா பவர், நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்தார். 

இதன்படி கூட்டமைப்புடனான சந்திப்பில் போருக்கு பின்னரான காலத்திலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்தார். 

குறிப்பாக குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக உள்ளதை அவரது கவனத்துக்கு தாங்கள் கொண்டுவந்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வைப் பெற்றுத்தர தம்மாலான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து தமிழ் மக்கள் எவ்விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சமந்தா பவர் தமக்கு வாக்குறுதி அளித்ததாகவும் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியுள்ளார். 

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியத் தேவை, உண்மைகள் அறியப்பட வேண்டியது, உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டியத் தேவை ஆகியவை குறித்து தாங்கள் அவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், இனியும் இலங்கையில் இப்படியானச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் நல்லிணக்கம் தொடர்பிலும் சமந்தா பவர் அம்மையாருடன் கூட்டமைப்பினர் உரையாடியதாவும் சம்பந்தன் கூறினார். 

தமிழ் மக்களுக்கான வேலை வாய்ப்புகள், வீட்டு வசதி, மீள்குடியேற்றம், முறையான புனர்வாழ்வு, கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்தும் அவருடன் விரிவாகப் பேசப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.