பிளவுபட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்க பாலத்தை ஏற்படுத்துவதே இலங்கைக்கு அவசியமானது என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அந் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பாரிய இடைவௌி உள்ளது. பாடசாலைகளும் இரண்டு சமூகங்களுக்கும் வெவ்வேறாக உள்ளன என இதன்போது சுட்டிக்காட்டிய அவர், இந்தநிலையில் இந்தியாவைப் போன்று ஆங்கில மொழிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தால் அது இரண்டு சமூகங்களுக்கும் இணைமொழியாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது வாழ்வில் மிகவும் ஆபத்தான கட்டம் ஒன்று இருந்ததாகவும் அவர் இதன்போது நினைவுகூர்ந்தார்.
எனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. எனது வீடு கண்காணிக்கப்பட்டது. பெரும்பாலான மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டது, இவை புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் மாற்றமடைந்துள்ளன என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் குறித்து வினவப்பட்ட போது, ஆண்களுக்கு நிகராக பெண்கள் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அரசியலில் அவர்களுக்கான இடஒதிக்கீடு இல்லை, ஆனால் புதிய அரசாங்கம் குறைந்தது 25 வீதமாவது தேர்தலில் பெண்கள் போட்டியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்