பீகாரின் 53-வது முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார் !

பாட்னாவில் இன்று நடக்கிற கோலாகல விழாவில், ஐந்தாவது முறையாக பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். 

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, மகா கூட்டணியின் சட்டசபை குழு தலைவராக (முதல்-மந்திரியாக) நிதிஷ் குமார், கடந்த 14-ந்தேதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே அவர் மாநில கவர்னர் ராம்நாத் குபிந்தை சந்தித்து அரசு அமைக்க உரிமை கோரினார். அவரும் அழைப்பு விடுத்தார்.

Nitish_Kumar_1

இதையடுத்து பாட்னா காந்தி மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து 28 மந்திரிகள் பதவியேற்றனர். இவர்களில் 12 பேர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். 

பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக அவர் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

மேலும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், சிவசேனா சார்பில் மராட்டிய மாநில மந்திரிகள் ராம்தாஸ் கதம், சுபாஷ் தேசாய் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாட்னாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழாவை தொடர்ந்து முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்தினர்களுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.