மாலி ஓட்டலில் பிணைக்கைதிகளில் 3 பேர் தீவிராவாதிகளால் சுட்டுக்கொலை !

மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுமார் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த மூன்றாண்டுகளாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடிக்கும் இந்த கும்பல், அரசிடம் பணம்கேட்டு மிரட்டி வருகின்றது. பணம் தராவிட்டால் பிடித்து வைத்திருக்கும் மக்களை ஈவிரக்கமின்றி இவர்கள் கொன்றுகுவித்து வருகின்றனர். 

2f40dadd-4394-47ef-8380-10d38a6b7cbd_S_secvpf

இந்நிலையில், மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோ நகரில் உள்ள ராடிசன் ஓட்டலுக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் அங்கு ஏழாவது மாடியில் தங்கியிருந்த சுமார் 30 ஓட்டல் ஊழியர்கள் உட்பட 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். 

பதிலுக்கு உள்ளே இருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளால் திருப்பிச் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த ஓட்டல் இருக்கும் பகுதி முழுவதும் போர்க்களம்போல் காணப்படுகிறது.

இந்நிலையில், பிணைக்கைதிகளில் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருப்பதாக சர்வதேச ஊடகமான ஏ.எப்.பி சற்று முன் செய்தி வெளியிட்டுள்ளது. இதை அந்நாட்டு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. 

தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றதையடுத்து, ஓட்டலுக்குள் புகுந்த பாதுகாப்பு படையினர் பிணைக்கைதிகளில் 12 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.