சிறுவர் கடற்கரை பூங்காவின் திருத்த வேலைக்கு 35 இலட்சம் உடனடியாக ஒதுக்கீடு – சுகாதார அமைச்சர் நஸீர்

 

அபு அலா –

அட்டாளைச்சேனை கடற்கரைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் கடற்கரைப் பூங்காவின் சில பகுதிகள் இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதை பார்வையிடுவதற்காக இன்று (20) வெள்ளிக்கிழமை காலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.

aa_Fotor

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது, சுகாதார அமைச்சராக இருக்கும் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் காலப்பகுதியில் அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் இந்த சிறுவர் கடற்கரைப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டமையும் சில தினங்களுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கள் என நினைத்துக்கொண்டு சில தீய சக்தியினரால் இப்பூங்கா உடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்பூங்காவை உடனடியாக திருத்தம் செய்யவேண்டும் எனவும் அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் இன்றிலிருந்து ஆரம்பிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் க.பிலேந்திரன் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.எல்.முஹம்மட் தம்பி, ஏ.எம்.ஹாறூன் ஆகியோர்களுக்கு சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பணிப்புரை விடுத்தார்.

ab_Fotor

இதனை திருத்தம் செய்வதற்காக 35 இலட்சம் ரூபாவினை உடனடியாக ஒதுக்கீடு செய்து தருவதாகவும் இப்பூங்காவின் சகல திருத்த வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் இதன் திருத்த வேலைகள் யாவும் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கப்பட்டு மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு விடப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த விஜயத்தில் சுகாதார அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயிம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், பிரதேச சபையின் செயலாளர் க.பிலேந்திரன் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.எல்.முஹம்மட் தம்பி, ஏ.எம்.ஹாறூன் ஆகியோர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.