வடகிழக்கு பருவமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு தரப்பில் பல்வேறு நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில் திருப்பதி நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய மீட்பு படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 4,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
“தமிழகத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, சென்னை பேசின் பாலம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 45 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 4500-க்கும் அதிகமானோர் மழை பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகளில் அரசு நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தனர்.
இதேபோல் நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட ஆந்திராவின் பகுதிகளிலும் 6 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது” என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.