மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை வெர்சோவாவில் உள்ள இன்லக்ஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாடல் அழகி தேவ் தத்தா(வயது35). இவர் சம்பத்தன்று இரவு தனது வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சென்றனர். அப்போது தேவ் தத்தா அளவிற்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு மிதமிஞ்சிய போதையில் இருந்தார்.
மேலும் போலீசாரின் கண்முன்னே அவர் வீட்டின் உரிமையாளர் லதாவை அவதூறாக பேசி, பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்தார்.
இதையடுத்து, போலீஸ்நிலையத்தில் இருந்து மேலும் 2 ஜீப்களில் போலீசார், பெண் போலீஸ் அதிகாரிகளை அவர்கள் அங்கு வரவழைத்தனர். அங்கு வந்த போலீசார் தேவ் தத்தாவை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் நிலைமை எல்லை மீறிப்போகவே மாடல் அழகி தேவ் தத்தாவை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவர் போலீசாரை தரக்குறைவாக பேசி திட்டியபடியே வந்தார். மேலும் திடீரென முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார்.
இந்தநிலையில் போலீஸ் நிலையம் சென்ற பிறகும் போதை இறங்காத நிலையில், போலீஸ் நிலையத்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் தவிர போலீசாரையும் தாக்கத் தொடங்கினார். இருப்பினும், போலீசாரால் மாடல் அழகியை கட்டுப்படுத்த முடியவில்லை.
‘மும்பை குடிமகன், மகள்’ மீது போலீசார் எக்காரணத்தை கொண்டும் அடக்குமுறைகளை கையாளக்கூடாது என கமிஷனர் உத்தரவிட்டு 2 நாட்கள்கூட ஆகாததால் போலீசார் பல்லைக்கடித்து கொண்டு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாடல் அழகி தேவ் தத்தாவை பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது லால்பாக் ராஜா மண்டலினுள் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக ஒருபெண் நுழைய முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது அந்தப் பெண், போலீசாரை அவதூறாக பேசினார். இந்தநிலையில் அங்கு பணியில் இருந்த போலீசார் அந்தப் பெண்ணை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்த சம்பவத்தில் 3 பெண் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோல், சமீபத்தில் அந்தேரி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடியை போலீசார் தாக்குவது போன்ற வீடியோவால் சர்ச்சை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்களால் எங்களை அவமானப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயமாக உள்ளது”, என்றார்.