அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றது : சபீஸ் !

சப்றின்

தேர்தல் காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அத்தியாவசியப் பொருட்களின்  விலைகள் காதும்  காதும் வைத்தமாதிரி அதிகரிக்கப்பட்டு வருகிறது என தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் கூறினார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.

 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.-

 

 சில பொருட்களின் விலைகள் வெளிப்படையாக அதிகரிக்கப்பட்டதற்கு அரசாங்கம் கூறியுள்ள காரணங்கள் நொண்டிச் சாட்டுகளாகவே காணப்படுகிறது. உதாரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியில் நச்சுத்தன்மை காணப்படுகிறது என்று சீனியின் விலை அதிகரிப்புக்கு கூறியுள்ள காரணம்,   அதிக விலை கொடுத்து நச்சுப் பதார்த்தங்களை மக்கள் உண்ண முடியும் என்பதுபோல அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. உள்நாட்டுச் சீனி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என விலை உயர்வினைக் கொண்டு வந்தால்  உள்நாட்டுச் சீனியை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் ஆனால் அதன் விலையும் எகிறிக்  கிடக்கின்றது. 

safees

இவ்வாறே அரிசி, பருப்பு, வெங்காயம் என அத;தியவசியப்  பொருட்களின் விலைகள் இரவோடு இரவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்தல் காலங்களில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்களை ஏமாற்றி  வாக்குகளைப் பெறுவதற்காக கட்டிவிடப்பட்ட புளுகு மூட்டையாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. இன்று உலகில் மசகு எண்ணையின் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல்  1 லீற்றருக்கு மக்கள் மீது  100 வீத வரி வித்தாலும் 82.30 ரூபாய்க்கு அரசாங்கத்தினால் வழங்க முடியும்.  அதனை  நடைமுறைப்படுத்துவதாக  கூறிய அரசாங்கம் தேர்தல் கால கட்டுக் கதையாகவே மறந்துபோனது. 

 

பெட்ரோல் டீசல் விலை ஏறினால் உடனடியாக பொருட்களின் விலையினை அதிகரிப்பார்கள் கடந்த வருடத்தில் பெட்ரோல் விலை 42 ரூபாவால் குறைவடைந்திருந்த போதிலும் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இது அரசாங்கத்தின் மந்த நிலையை எடுத்துக் காட்டுகிறது. மக்களின் சேமிப்புகளை கரையான் அரிப்பது போன்று அளித்துவிடக் கூடிய ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும்  அத்தியாவசியப் பொருகளின் விலை ஏற்றத்தினை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி விழிப்புணர்வு போராட்டத்தை தேசிய காங்கிரஸ் நடாத்தும் எனவும் மேலும் கூறினார்.