கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. அவைகளை ஏதேனும் ஒருமுறையில் நீர் வடிந்தோட வழி செய்யவேண்டும். அல்லது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவேண்டும் அவர்களுக்கான சகல பாதுகாப்பு, உணவு போன்றவற்றை பிரதேச செயலகங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பொது மக்களுக்கான சேவைகளில் பொடுபோக்காக நடந்து கொள்ளும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக மிகவும் காட்டமான சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மழை வெள்ளம் காரணமாக நுளம்பு அதிகரித்து குழந்தைகள், மற்றும் சிறுவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாலும், நுளம்புத் தொல்லையைத் தடுக்கவும் மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகள் வழங்குவதற்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைச்சின் ஊடகச்செயலாளர் எஸ்.எல்.முனாஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.