பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 80 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து சம்பவ இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். நகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பாரிஸ் நகர எல்லைகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை அவர்கள் பிரெஞ்ச் மற்றும் அரபி மொழிகளில் அறிக்கையாக இணைய தளத்தில் நேற்று வெளியிட்டனர்.
சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்காவுடன் இணைந்து பிரான்சும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பாரிஸ் நகரை குறி வைத்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாரிஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது உலகநாடுகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா, தாக்குதலை தீவிரப்படுத்த முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாரிஸ் தாக்குதலை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை ஒபாமா கேட்டறிந்தார்.
சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதலை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.