பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தன்னுடைய முடிவை திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர், அதேபோல தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்றுக் கொள்வதாகவும், இருந்த போதிலும் இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.