புதிய , பழைய அரசியல்வாதிகளின் DNA கலப்பற்ற ஒரு இளைஞர் படையணியை உருவாக்குவோம் !

_20140831_03p9
  இளைஞர் பாராளுமன்றம்
 
 அண்மையில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் மிகவும் வெற்றிகரமாகவும், CAFE இன் கண்காணிப்பில் அமைதியான முறையிலும் இடம்பெற்று முடிந்தது நாமறிந்த விடயம்.
 
225 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 657 இளைஞர்கள் போட்டியிட்டதோடு, இத்தேர்தலானது 166 தேர்தல் தொகுதிகளிலிருந்து 166 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்யும் முறையில் இடம்பெற்றது. 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அதிகமாக உள்ள 08 மாவட்டங்களிலிருந்தும் 08 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதுடன் 57 உறுப்பினர்கள் நேர்முக தேர்வுமூலம் தெரிவு செய்யப்படுவர்.
 
இத்தேர்வு முறையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களது கோட்பாட்டின் அடிப்படையிலும் இராஜாங்க அமைச்சரான நிரோஜன் பெரேரா அவர்களது நெறிப்படுத்தலின் மூலம் உருவானதாகும்.
 
இத்தகைய மதிப்பும் கண்ணியத்துக்கும் உரிய பதவியைப் பெறும் எமது பிராந்திய இளைஞர்கள் கடந்த காலத்திலும் தற்போதும் எதனை சாதித்துள்ளனர் என்பதை நாம் சற்று நிதானமாக யோசிக்க வேண்டியுள்ளது.
 
கடந்த 2013 இல் நடைபெற்ற இதே போன்றதொரு இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் எமது பிராந்திய இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதிப்பிரதமர் மற்றும் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டும் இருந்தனர். இச்செய்தியானது எம்மை சந்தோசத்தில் ஆழ்த்தியிருந்தமையுடன் பலவிதமான நியாயமான எதிர்பார்ப்புக்களையும் தோற்றியிருந்தது. 
 
எனினும் குறித்த இவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இளைஞர்சார் செயற்பாடுகள் அல்லது கருத்திட்டங்கள் தொடர்பில் நாம் எதிர்பார்த்தளவு அல்லது ஏதாவது ஆக்கபூர்வமான விடயங்கள் இடம்பெற்றதா என்பது நாம் அறியக்கூடியதாகயில்லை.
 
எனது அன்புக்குரிய சகோதரர்களே!
 
எதிர்கால வாழ்க்கைக்கான தலைமைத்துவ வழிகாட்டல்கள், சமுதாயத்தில் மதிப்புமிக்க உயரிய நிலையை தாண்டி தன்னை நம்பி தேர்வு செய்த இளைஞர்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்க முடியுமென்பதை தேர்வு செய்யப்பட்டவர்கள் உணர வேண்டும்.
 
மரபு வழி அரசியல் போக்கான மாலை சூடி, பட்டாசு கொழுத்தி மற்றும்; ஊர்வலங்கள்  சென்று வெறுமனே தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல் நாளை நல்லதொரு தலைவனாக தன்னை சமூகத்தில் நிலைத்திருக்கச் செய்ய தங்களது பதவியினை இறைவனுடைய “அமானிதமாகக்” கொண்டு அதற்கேயுரிய பணியைச் செய்ய உறுதி பூணுவது காலத்தின் தேவையாகும்.
 
“உங்களது பணி எமக்கான நாளையின் புதிய, பழைய அரசியல்வாதிகளின் DNA கலப்பற்ற ஒரு இளைஞர் படையணியை உருவாக்குவதேயாகும்.”
 
 ஏ. எல். ஆஸாத்
aazath