நாட்டில் சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சுமார் 1338 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்தது.
சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 254 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சாந்தபுரம் மற்றும் பொன்னகர் பகுதிகளில் மழை வெள்ளத்தினால் 60 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.
சாந்தபுரம் பகுதியில் மழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றுள் 18 வீடுகள் முழுமையாகவும், 32 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியது.
இதுதவிர, பொன்னகர் பகுதியிலும் 12 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முறிகண்டி வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் மூன்றடிகள் உயரத்திற்கு வௌ்ளம் தேங்கியுள்ளதாகவும், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீட்டினுள் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு புகுந்த முதலை 14 வயது சிறுமி ஒருவரின் தலையில் கடித்துள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் விழித்து பார்த்த போது சிறுமியின் தலை முதலையின் வாயினுள் அகப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடும் பிரயத்தனத்தின் பின்னர் சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இதேவேளை, தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களினதும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரணைமடு குளம் வான் பாய்வதால், குளத்தின் 10 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்ப்பாசனப் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் மழை வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கால்நடை மேய்ச்சலுக்காக நேற்று மாலை சென்றிருந்த ஒருவரே மழை வௌ்ளத்தில் அள்ளுண்டு சென்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை வௌ்ளத்தினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளப்பாடு பகுதியில் தற்காலி வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளமையால், சுமார் 18 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளன.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
மழையுடனான வானிலை காரணமாக எழுவன்குளம் வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
இராஜாங்கனை, தப்போவ, தெதுருஓயா மற்றும் உடவளவை நீர்த்தேக்கங்களிலும் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் சிறிய குளங்கள் வான் பாய்வதால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வயல் நிலங்களில் நெற்பயிர்களை மூடி நீர் பாய்ந்து வருகின்றது.
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாமினுள்ளும் வௌ்ள நீர் புகுந்துள்ளமையால் மக்கள் அவதியுறுகின்றனர்.
இந்த முகாமில் சுமார் 186 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மன்னார் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது.
இதனால் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் பல பகுதிகளிலும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தின் காசல் ரீ மற்றும் விமலசூரிய நீர்த்தேக்கங்கள் வான் பாயும் மட்டத்தை அண்மித்துள்ளது.