பிரான்ஸ் படுகொலை சம்பவம் : அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்!

ஏ.எச்.எம்.பூமுதீன்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்றிடம்பெற்ற துயரச் சம்பவத்தை அறிந்து மிக வேதனையும் கவலையும் அடைவதாக தெரிவித்துள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
Minister_Rishad_3_0
அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உலக நாடுகள் மத்தியில் அமைதிமிக்க நாடாக வர்ணிக்கப்படும் பிரான்ஸில் நேற்று வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 150க்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பது பெரும் துயரத்தை தோற்றுவித்துள்ளது.
பரிஸ் தலைநகரத்தை அண்மித்த ஐந்து பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடாத்தியும் தற்கொலை தாக்குதல் புரிந்தும் இக்கொடூரப் பாசிச தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை நாடு இவ்வாறான தாக்குதல் சம்பவங்களுக்கு 30 வருடங்களாக முகம் கொடுத்து, அந்த பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு இன்று சமாதான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த 30 வருடகால யுத்தத்தை நேரடியாக கண்ணுற்றவன், அனுபவித்தவன் என்ற ரீதியில் பரிஸ்வாழ் மக்களின் துயரத்தை நன்கு அறிந்தவனாக அவர்களது துயரத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்.
பரிஸ்  ஜனாதிபதி மற்றும் அவரது அமைச்சரவை அவசரகால நிலையை பிரகடனப் படுத்தியிருக்கும் தற்போதைய நிலையில் பரிஸ் மக்கள் இந்த பிரகடனத்திற்கு ஒத்தாசை புரிந்து உதவி வழங்கக் கூடிய தார்மீகப் பொறுப்பில் உள்ளனர்.
அதே வேளை பரிஸ் வாழ் இலங்கையர்கள் தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதி – அமைச்சரவையும் அவர்களின் நலன் தொடர்பில் அறிவதில் பெரும் கவனத்தை செலுத்தியுள்ளது.
இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு பரிஸில் வாழும் இலங்கையர்களின் குடும்பம், அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது தொடர்பில் தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது (33620505232 , 33677048117)
அந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கையர்கள் தொடர்பு கொள்ள முடியும் என நான் வேண்டிக் கொள்கின்றேன்.
பரிஸ் ஜனாதிபதி – அமைச்சரவை இலங்கையில் உள்ள பரிஸ் தூதுவர், பரிஸ் வாழ் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் பரிஸ், விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதுடன், அதற்காக பிரார்த்தனை செய்வதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின்  உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.