பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று லண்டன் சென்ற அவருக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் பல்வேறு தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தார். அவருக்கு ராணி மதிய விருந்து அளித்து கௌரவித்தார் .
இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் வெம்ப்லே மைதானத்தில் சற்று முன் தொடங்கியது. இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான கதகளி, பரதநாட்டியம், குச்சுப்புடி, போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் ராப் பாடகர் ஜே சீன், பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தன.
இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். இன்னும் சிறிது நேரத்தில் வெம்பிளே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.