லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
பெய்ரூட்டின் புறநகர் பகுதியான புர்ஜ் அல் பரஜ்னே பகுதியில் வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து லெபனான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு தீவிரவாதி மசூதிக்கு வெளியே தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். மற்றொரு தீவிரவாதி பேக்கரி அருகே தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். மூன்றாவது தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன்பு பலியாகியுள்ளான். இரண்டாவது நபர் நடத்திய தாக்குதலில் அந்த தீவிரவாதி பலியாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.” என்றார்.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் கோட்டையான அந்த பகுதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து ஷியா பிரிவினரின் அமைப்பான ஹிஸ்புல்லா, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக போராடி வரும் நிலையில், நேற்று முன்தினம் நடந்த இந்த இரட்டை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.