“குட்டியாடு குடலேற கொழுத்தாலும் வழுக்களே வழுக்கல்தான்” என்று ரிசாத் பதியுதீனை ஜனாதிபதி கணித்துள்ளாரா ?

 

 வடபுல முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மு.கா. க்கு அலுத்துப்போன விடயத்துக்கு ஏன் இவ்வளவு விளம்பரம்?  

 

வடபுல முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக பேசுவதற்கு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்றவகையில் பேச்சுவார்த்தைக்காக ரிசாத் பதியுதீனை ஜனாதிபதி அவர்கள் அழைத்தாராம். இதுதான் அண்மைய சில நாட்களாக ரிசாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஊடக விளம்பரமாகும். தன்னை வித்தியாசமாக விளம்பரப்படுத்துவதில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் சளைத்தவரல்ல. எதிர்காலங்களில் இன்னும் எவ்வாறான புதிய புதிய விளம்பரங்கள் வரப்போகின்றதோ தெரியவில்லை.

 

ரிசாத் பதியுதீனின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான அழைப்பு ஒன்று ஜனாதிபதியிடம் இருந்து வந்ததனால்தான் இவ்வளவு விளம்பரப்படுத்துகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. அதிலும் வடமாகான முஸ்லிம்கள் அனைவரும் அவசர அவசரமாக மீள் குடியேற்றப்பட போகின்றார்கள் என்ற ரீதியிலேயே இது காணப்படுகிறது. சிங்கள அரசின் அரசியல் திருகுதாளங்களை புரிந்துகொள்ளாமல் இவ்வாறான விளம்பரங்கள் மூலம் எதனை சாதிக்க நினைக்கின்றார்? 

rauff hakeem , rishad

1990 ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்றுவரை அம்மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தாமாக சிங்கள அரசுகள், முஸ்லிம் மக்களை திருப்தி படுத்தும் பொருட்டு நூற்றுக்கனக்கான கூட்டங்களையும், மகாநாடுகளையும் கண்துடைப்புக்காக அவ்வப்போது நடாத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்களில்  முஸ்லிம் மக்கள் சார்பாக பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரசை அழைப்பது வழமையாகும். இது முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரையில் அலுத்துப்போனதொரு  விடயமுமாகும். 

 

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தை எடுத்துக்கொண்டால், 1990 ஆண்டில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதில் இருந்து 2000 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணிக்கும்வரைக்கும், வடமாகான முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக பேசாத இடமே இல்லை. கூடாத கூட்டங்களே இல்லை. பலதடவைகள் பாராளுமன்றத்தில் இம்மக்களுக்காக குரல் கொடுத்ததுடன் இம்மக்களின் வெளியேற்றத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகளை அவ்வப்போது கண்டிக்க தவறவில்லை. 

 

மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் இன்றைய தலைவர் ஹக்கீம் அவர்கள் இவ்வாறான அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றிருந்தார். அத்துடன் இப்படியான கூட்டங்களில் தன்னால் கலந்துகொள்ள முடியாத சில வேளைகளில் தனக்கு பதிலாக இன்றைய தலைவர் ஹக்கீம் அவர்களை, அன்றைய தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது பிரதிநிதியாக அனுப்பியிருந்தார். 

 

தலைவர் ஹக்கீம் அவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை வடபுல முஸ்லிம் அகதிகளுக்காக பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியேயும் பேசிப்பேசியே எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. அத்துடன் இது சர்வதேச ரீதியில் பிரபலமடைந்து கவனம் செலுத்தப்பட்ட ஓர் விடயமுமாகும்.

 

வடபுல முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக மறைந்த தலைவர் அஷ்ரப் மற்றும் இன்றைய தலைவர் ஹகீம் போன்றவர்களுக்கு பக்கபலமாக முன்னாள் வன்னி மாவட்ட மு. கா  பாராளுமன்ற உறுப்பினரான புனியமூர்த்தி அபூபக்கரும், யாழ் மாவட்ட மு. கா. முன்னாள் பா. உறுப்பினரான இல்லியாஸ் அவர்களும், மற்றும் மரணிக்கும் வரைக்கும், வன்னி மாவட்ட மு. கா. பா. உறுப்பினர் மர்ஹூம் நூர்தீன் மசூர் போன்றவர்களின் முயற்சிகளை இலகுவில் மறந்துவிட முடியாது. 

maithri , rauf

1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரைக்கும் வடபுல முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் அவ்வப்போது பேசிய போதெல்லாம் விடுதலைப் புலிகளை சாட்டுச்சொல்லியே மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கங்கள் காலத்தினை கடத்தி வந்தன. 

 

ஆனால் 2009 ஆண்டு மே மாதத்துடன் விடுதலைப் புலிகள் இந்த நாட்டில் இல்லை என்று சிங்கள அரசாங்கம் சான்றிதழ் வழங்கிய பின்பு, மக்களை மீள் குடியமர்த்துவதில் எந்தவித தடங்களும் இல்லாத நிலை உருவாகியது. அப்போது அகதிகளை மீள் குடியேற்றுவதற்கு பொறுப்பான, மீள் குடியேற்ற அமைச்சராக ரிசாத் பதியுதீன் பதவி வகித்ததுடன், மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் என்று கூறுமளவுக்கு உச்ச அதிகாரத்துடன் காணப்பட்டார். 

 

இப்படியாக தனது கையில் அத்தனை அதிகாரங்களும் இருந்தபொழுதும் சொந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்துவிட்டு, இப்போது முஸ்லிம் அகதிகள் சம்பந்தமாக பேசுவதற்கு ஜனாதிபதியை சந்தித்ததாகவும், மீள் குடியேற்ற அமைச்சரை சந்தித்ததாகவும், பாராளுமன்றத்தில் முழங்கியதாகவும், அமைச்சரவையில் முரண்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது யாரை ஏமாற்றுவதற்கு?

 

முஸ்லிம் காங்கிரசினதும் அதன் தலைவர் ஹகீம் அவர்களினதும் தயவினால் 2004 இல் முதன் முதலில் பாராளுமன்றம் சென்ற ரிசாத் பதியுதீன் அவர்கள், இன்று தன்னை முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதி என்று விளம்பரப் படுத்துகின்றார். அப்படியென்றால் தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சியையும், தலைவரையும் எப்படி அழைப்பது? ஒவ்வொரு காலத்துக்கொரு கட்சியா? மயிரிழையில் உயிர் தப்பியது போன்று இம்முறை பாராளுமன்றம் சென்ற ரிசாத் பதியுதீன் அவர்கள், எதிர்காலத்தில் அதாவுல்லா போன்று தோல்வியடைந்தால் யாரை தலைவர் என்பது?

 

வடபுல முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் விடயத்தில் ரிசாத் பதியுதீனால் எடுத்த நடவடிக்கைகள் என்ன? வடபுல முஸ்லிம் மக்களுக்காக அவர்கள் அகதிகளாக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக இன்றுவரை குரல் கொடுத்துக்கொண்டு வருபவர்கள் யார்? ஊடகங்களின் மூலமாக இல்லாத பொய்களையெல்லாம் பரப்புவதன் மூலம் உண்மையை பொய்யாக்கிவிட முடியுமா? 

 

வட மாகான முஸ்லிம்களை மீள் குடியமர்த்தும் பொருட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அவர்கள் சில அமைச்சர்களை அழைத்து கூட்டம் ஒன்றினை கூட்டி, இதற்காக ஒரு குழு ஒன்றினையும் அமைத்துள்ளார்.  

 

பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்துவதனாலும், ஆளும் ஐ. தே. கட்சி சார்ந்த அமைச்சர் என்பதனாலும், இக்கூட்டத்துக்கு ரிசாத் பதியுதீன் அழைக்கப்பட்டார். அந்த வகையிலேயே வட மாகான முதலமைச்சரும் அழைக்கப்பட்டார். இந்த இடத்தில் வன்னி மாவட்டத்தை சேர்ந்த வேறு யாராவது அமைச்சராக இருந்திருந்தாலும் அவர் அழைக்கப்பட்டிருப்பார். மாறாக அவர் முஸ்லிம் மக்கள் சார்பாக அழைக்கப்படவில்லை. அப்படி முஸ்லிம் மக்களின் சார்பாக ரிசாத் பதியுதீன் அழைக்கப்பட்டிருந்தால், கண்டி மாவட்டத்தை சேர்ந்த தலைவர் ஹக்கீம் அவர்களை ஏன் அழைக்க வேண்டும்? அத்துடன் இந்தக் குழுவினை மு. கா. தலைவர் ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஏன் அமைக்க வேண்டும்?   

 

விடயம் இதுதான், வட மாகான முஸ்லிம் மக்களை மீள் குடியமர்த்தும் பொருட்டு தலைவர் ஹக்கீம் தலைமையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட இந்த குழுவின் மூலமாக இந்நாட்டு முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதி முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைவரும்தான் என்பதனை மீண்டும் ஜனாதிபதி அவர்கள் அங்கீகரித்துள்ளார். “குட்டியாடு குடலேற கொழுத்தாலும் வழுக்களே வழுக்கல்தான்” என்பது ரிசாத் பதியுதீன் விடயத்தில் காணக்கூடியதாக உள்ளது.  

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது