பிரதமரின் மே தின வாழ்த்து ….

Ranil-Wickremesinghe

தொழிலாளர்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி மக்கள் புரட்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் நிம்மதி மூச்சு விடக்கூடிய சுதந்திர சூழல் உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமரின் மேதினச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது,

இன்று தொழிலாளர்களின் தினமாகும். தனது வியர்வையைச் சிந்தி உழைத்து உலகத்தின் நிலைத்திருப்பை உறுதிசெய்யும் தைரியமிக்கவர்களின் தினமாகும். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதித்து அவற்றை நசுக்கியிருந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மேற்கொண்ட பாரிய சமூகப் புரட்சியின் மக்களுக்கு சுதந்திரமாக மூச்சுவிடக் கூடிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. 

உலக தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து இன்று வேலைத் தளங்களில் பணிபுரியும் இலங்கை வீரர்களும் அந்த சுதந்திரத்தின் பயனால் கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியுடனேயே தொழிலாளர் தினத்தை கொண்டாடுகின்றனர். உயிர்த் தியாகங்கள் மற்றும் பல்வேறு துன்பகரமான அனுபவங்களுக்கு முகங்கொடுத்து பெற்றுக் கொண்ட அந்த சுதந்திரத்தை அர்த்தம் வாய்ந்ததாக்கிக் கொள்வதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் செயற்படவேண்டியுள்ளது. 

உறுதியான அபிவிருத்தி நடவடிக்கையொன்றின் ஊடாக தேசத்தை கட்டியெழுப்புவதற்கும், அதனூடாக மக்களின் வாழ்க்கையை செளபாக்கியம் மிக்கதாக மாற்றியமைப்பதற் கும் நாம் அணிதிரள வேண்டியுள்ளது. இந்த அபிவிருத்தி நடவடிக்கையின் முன்னோடிகள் தொழிலாளர் வர்க்கமாகும். அவர்களின் வியர்வையும் ஊழியமும்தான் ஒருநாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதை நாம் வரலாறு பூராவும் கண்டுள்ளோம்.

அந்த உழைப்புக்கு உரிய கெளரவமளித்து அவர்களை மதிப்பீட்டிற்கு உட்படுத்தி தொழிலாளர்களது உரிமைகளை உறுதிசெய்து அவர்களது வாழ்வின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் அபிலாஷையாகும்.

உதயமாகியுள்ள புதிய அரசியல் கலாசாரமானது தொழிலாளர் வேலைத்தளப் போராட்டத்தை வெற்றி கொள்வதற்கும் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.